தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-2017-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-தென்மாவட்டங்களில், பால்வளத்தை ஊக்குவிக்க 45 கோடி ரூபாய் செலவில், புதிய பால் பொருட்களைத் தயாரிக்கும் அலகு ஒன்று மதுரையில் அமைக்கப்படும். இதன் மூலம், ஐஸ்க்ரீம் உட்பட பல்வேறு பால் பொருட்கள் தயாரிக்கப்படும்.2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பால் வளத்துறைக்கு 121.69 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும், குடும்பத்திற்கு 4,000 ரூபாய் நிவாரண உதவியும், மீன்பிடி குறைவாக உள்ள காலத்தில் வழங்கப்பட்டு வரும், குடும்பத்திற்கு 2,000 ரூபாய் நிவாரண உதவியும் மீனவர்களின் இன்னல்களையும், துயர்களையும் கணிசமாகப் போக்கியுள்ளது. தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, இவ்விரு திட்டங்களிலும் வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள், குடும்பம் ஒன்றிற்கு 5,000 ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும்.இவை போன்ற நிவாரண உதவித் திட்டங்களைச் செயல்படுத்த, 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 223 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆபத்தான கால கட்டங்களில் மீனவர்களை எச்சரிக்கை செய்வதற்கான, 48 கோடி ரூபாய் செலவில், 30,000 அவசர காலத் தகவல் அனுப்பும் கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உலக வங்கி நிதியுதவியுடன், 62.14 கோடி ரூபாய் செலவில் தொலைத்தொடர்பு வசதிகளையும், உயர் அதிர்வெண் தொடர்பு சாதனங்களையும், அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் வழங்க உரிய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கால்வாய் கரையோரங்களிலும், படுகை நிலப் பகுதிகளிலும், வனப்பகுதிக்கு வெளியில் உள்ள பகுதிகளிலும் தேக்கு மரங்கள் மற்றும் இதர மரங்கள் வளர்ப்பின் மூலம், மாநிலத்தின் பசுமைப் பரப்பளவு மேம்படுத்தப்பட்டு வருகிறது. 2016-2017 ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த ஐந்தாண்டுகளில், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 52.64 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.