இந்தி, சமஸ்கிருதத்தை திணித்தால் பாஜக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

89 0

 தமிழக மக்கள் மீது இந்தி, சமஸ்கிருதத்தை திணித்தால் பாஜக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று,இந்திய குற்றவியல் சட்டங்களை மறு சீரமைத்து புதிய சட்டங்கள் கொண்டு வருவதற்கான 3 புதிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார். அதன்படி, 160 ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்துக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா மசோதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு பதிலாக பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, இந்திய சாட்சியங்கள் சட்டத்துக்கு பதிலாக பாரதிய சாக்ஷிய மசோதா ஆகிய பெயர் மாற்றங்களோடு புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை இந்தியோடு ஆங்கிலமும் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும் என்று முன்னாள் பிரதமர் நேரு உறுதிமொழி கூறினார். பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும், இந்திரா காந்தியும் உறுதி செய்தார்கள். இதையொட்டி இந்தி பேசாத மக்கள்மீது இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப் பாதுகாப்பு கிடைத்தது. இத்தகைய சட்ட பாதுகாப்பை சிதைக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்தில் உள்ள பெயரை இந்தியில் மாற்றி, இந்தி பேசாத மக்கள் மீதுதிணிக்க முயல்வது சட்டவிரோத செயலாகும்.

தமிழ்நாட்டின் கள நிலவரத்தைப் புரிந்து கொள்ளாமல், தமிழக மக்கள் மீது இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயன்றால் கடும் விளைவுகளை பாஜக சந்திக்க நேரிடும். அதிகார மமதையில் ஆட்சியில் இருந்துகொண்டு தமிழக மக்களை கிள்ளுக்கீரையாக நினைத்தால் விளைவு கள் கடுமையாக இருக்கும்.

தமிழக மக்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள். ஆனால், இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பார் களேயானால் தமிழகம் தழுவிய கடுமையான போராட் டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.