நாங்குநேரி சம்பவத்தால் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி – ஜாதி வன்மம், ஆயுத கலாச்சாரத்தில் சிக்கும் மாணவர்கள்

86 0

நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவரும், அவரது தங்கையும் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜாதி வன்மமும், ஆயுத கலாச்சாரமும் மாணவர்களிடம் தலை தூக்குவதை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முனியாண்டி – அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகன் வள்ளியூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். அதே பள்ளியில் படிக்கும் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 9-ம் தேதி இரவில் முனியாண்டியின் வீட்டுக்குள் புகுந்து மாணவரையும், அவரதுதங்கையையும் அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

நாங்குநேரி போலீஸார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து, பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் மற்றும்3 சிறார்களை கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் திருநெல்வேலி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிப் பருவத்திலேயே ஜாதி வன்மமும், ஆயுதங்களைக் கையாளும் குணமும் பள்ளி மாணவர்களிடையே தலைதூக்கி உள்ளதை ஆட்சியாளர்களும், அரசியல் கட்சியினரும் கண்டித்திருக்கின்றனர். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வலியுறுத்தியுள்ளார்.

நாங்குநேரி சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்பாக வள்ளியூரில் பெட்ரோல் வெடிகுண்டு தயாரித்து, அதனை வெடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட சிறுவர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளனர். பாளையங்கோட்டை அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் செல்போனில் வீடியோ பார்த்த மாணவர்களைக் கண்டித்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எந்த ஒரு செயலையும் ஜாதி, மதக் கண்ணோட்டத்துடன் அணுகும் போக்கு தென்மாவட்டங்களில் அதிகரித்து விட்டது.

இதுகுறித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மனநலத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் ஆ.காட்சன் கூறியதாவது: மாணவர்களை கண்டிப்பதற்கு ஆசிரியர்களும், தண்டிப்பதற்கு காவல்துறையும் தற்போது தயாராக இல்லை. இதனால், குற்ற உணர்ச்சியற்றவர்களாக, குழு மனப்பான்மை உள்ளவர்களாக சமூக விரோத செயல்களில் சில மாணவர்கள் ஈடுபடுகிறார்கள்.

அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தலைமுறையை உருவாக்க வேண்டும்.போதை ஒழிப்பு மையங்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடங்கள், குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்படும் இடங்களை மாணவர்கள் பார்வையிட வைக்க வேண்டும். தண்டனை இல்லாத சமுதாயம் சீராகாது. தண்டனையை அளவுக்குமீறி அளிப்பதும் எதிர்வினையை உருவாக்கும். இளஞ்சிறார்களை சிறந்தவர்களாக உருவாக்க அனைவரும் செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக குற்றவியல் மற்றும் குற்ற நீதியியல்துறைத் தலைவர் பேராசிரியர் சையது உமர் கத்தாப் கூறும்போது, “ஜாதிய வன்முறைகள், இணையவழி குற்றங்களைத் தடுப்பதில் அனைவருக்கும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.

மாணவர்களின் குற்ற நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகம். தங்களை பெரியவர்களாக சித்தரித்து, மற்றவர்களிடம் கவனம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்கள் திசைமாறுகிறார்கள். விளையாட்டு, என்சிசி, என்எஸ்எஸ், போன்றவற்றை திறம்பட செயல்படுத்த வேண்டும்” என்றார்.

மாணவர்களை சீர்படுத்த முயற்சிக்கும் ஆசிரியர்களும், குற்றங்களைத் தடுக்க முயலும் போலீஸாரும், வாக்கு அரசியலுக்கு பயந்து துறை ரீதியிலான தண்டனைக்கு அடுத்தடுத்து உள்ளானதால், தங்கள் கடமையில் இருந்து அவர்கள் விலகி நிற்கிறார்கள். தென்மாவட்டங்களின் நிலைமை இது.

தீர்வு என்ன?: இதுகுறித்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் குறைந்து வருகின்றன. அப்படியே வகுப்புகள் நடைபெற்றாலும் அதில் ஜாதி பாகுபாடு மற்றும் ஜாதி வன்மத்தை தவிர்ப்பது குறித்து ஆசிரியர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாது. ஏனெனில் ஆசிரியர்களும் ஜாதி ரீதியில் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல நடைபெற்றுள்ளன.

சமீப காலமாக போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்குகளை பள்ளி, கல்லூரிகளில் போலீஸார் நடத்தி வெற்றிகண்டுள்ளனர். அதுபோல், ஜாதி பாகுபாட்டை ஒழிப்பது குறித்தும் பள்ளி, கல்லூரிகளில் போலீஸார் மூலம் சீரான இடைவெளியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.