தி.மு.க. பெண் கவுன்சிலரை வெட்டிய 5 பேர் அதிரடி கைது- வாக்குமூலம்

85 0

கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது 44). தி.மு.க.வை சேர்ந்த இவர் மலுமச்சம்பட்டி ஊராட்சியில் கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் மோகன் (24). நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தனர்.

அவர்கள் வீட்டில் இருந்த ரவிக்குமார், கவுன்சிலர் சித்ரா, மோகன் ஆகியோரை தலை மற்றும் உடலில் அரிவாளால் வெட்டி விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தி.மு.க. கவுன்சிலரை வீடு புகுந்து வெட்டிய மலுமிச்சம்பட்டியை சேர்ந்த ராஜன் என்ற ராஜா (23), பிச்சைபாண்டி (23), வைசியாள் வீதியை சேர்ந்த முத்துப்பாண்டி (24), அம்மா நகரை சேர்ந்த மகேஷ் கண்ணன் (22), தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஸ்ரீரக்சித் (18) ஆகியோரை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜன், பிச்சைபாண்டி, முத்துப்பாண்டி ஆகியோர் மீது ஏற்கனவே கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

5 பேரிடம் தி.மு.க. கவுன்சிலர் மற்றும் அவரது கணவர், மகனை வீடு புகுந்து வெட்டியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- நாங்கள் 5 பேரும் கவுன்சிலர் வீட்டின் பின் புறத்தில் உள்ள காலி இடத்தில் இரவு நேரத்தில் மது அருந்துவோம். அப்போது கஞ்சாவும் பிடிப்போம். இதனை பார்த்த சித்ரா எங்களை போலீசில் பிடித்து கொடுத்து விடுவதாக மிரட்டி வந்தார். மேலும் இங்கு வைத்து கஞ்சா மது அடிக்க கூடாது என எச்சரித்து வந்தார். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை வீடு புகுந்து கொலை செய்வது என முடிவு செய்தோம்.

சம்பவத்தன்று இரவு நாங்கள் 5 பேரும் ஒன்றாக சேர்ந்து கஞ்சா குடித்தோம். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நாங்கள் அரிவாளுடன் கவுன்சிலர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தோம். எங்களை பார்த்த கவுன்சிலரின் கணவர் ரவிக்குமார் சத்தம் போட்டார். அப்போது அவரை நாங்கள் வெட்டினோம். கணவரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த கவுன்சிலர் சித்ராவையும் வெட்டினோம். இதனை தடுக்க வந்த அவரது மகனையும் வெட்டி விட்டு தலைமறைவாக இருந்தோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறினார். பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.