அத்துடன், காயப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாட்சியங்களை அழிக்கும் நோக்குடன் காணாமலும் ஆக்கப்பபட்டதாகவும் உயிர் தப்பியவர்களால் கூறப்படுகின்றது.
இன்றுடன் இந்த மக்கள் கொல்லப்பட்டு 33 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் இப்படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படாமல் இருப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் மறுக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது.
இதன் காரணமாக உரிய பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நலன்விரும்பிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் பெறவேண்டும் என வலியுறுத்தி இன்றைய நாளில் (ஆவணி 12) வருடா வருடம் இலங்கை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்திய வகையில் நினைவேந்தல்களை பல வகையான சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மேற்கொண்டு வருகின்றோம்.
எனவே, இலங்கை அரசாங்கமானது இவ்வாறான சம்பவங்களுக்கு முழுமையாக பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருக்கின்று என்பதனை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.
குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த யுத்த காலப்பகுதிகளில் இது போன்ற படுகொலைகள் தழிழர் பகுதிகளில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மயிலந்தனை படுகொலை மற்றும் திருகோணமலை குமாரபுரம் படுகொலை ஆகியவற்றிற்காக இலங்கை நீதி மன்றங்களில் கண்கண்ட சாட்சியங்களுடன் வழக்கு தாக்கல்கள் மேற்கொண்ட போதும் உரிய பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் பெறாமல் மறுக்கப்பட்ட வேதனையான சம்பவத்தினையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.
அதே போன்றே இன்றைய தினம் இம்மக்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆண்டு நினைவேந்தலினை மேற்கொள்ளப்பட்டது.
எனவே, வீரமுனை படுகொலை நடந்து இன்று 33ஆம் ஆண்டு நினைவு தினத்தில் மீளவும் நீதிக்காக தங்களிடம் கோரிக்கை வைக்கிறோம்.
01. இப்படுகொலை தொடர்பான வழக்கினை இலங்கை அரசாங்கமானது முன்னெடுக்க வேண்டும்
02. பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயமான நீதி கிடைக்கப் பெற வேண்டும்
03. குற்றம் இழைத்தவர்களை நீதிக்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்
04. இம்மக்களின் தொடர் நினைவேந்தல்களை அனுஸ்டிப்பதற்கான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்
05. மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். அதற்கான அரச தரப்பு முன்னெடுப்புகளை அறிவித்தல் வேண்டும்.