தமிழீழ விடுதலைப் போரில் முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரகாவியம் படைத்து 24 ஆவது ஆண்டுகள் கடந்து விட்டன.
யாழ்ப்பாணத்தில் மண்கும்பானை பிறப்பிடமாகக் கொண்ட துரைசிங்கம் புஷ்பகலா என்ற இயற்பெயர் கொண்ட அங்கயற்கண்ணி, கடற்புலிகள் மகளிர் படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்தவர்.
இவரிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. தொடக்கத்திலிருந்தே இவர் குழுத் தலைவியாக இருந்து வந்தார்.
விளையாட்டில் இவர் திறனுடன் விளங்கினார். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தார்.
எட்டு மணித்தியாலம் இருபத்தேழு நிமிடங்களில் பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்தினார்.
வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’ யின் போது லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருவராகக் கடற்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அங்கயற்கண்ணி ஆகஸ்ட் 16, 1994 இல் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற இலங்கைக் கடற்படையினரின் வடபிராந்திய தலைமை கட்டளையிடும் தாய்க்கப்பல் மீது கரும்புலித் தாக்குதல் நடாத்தி கப்பலை தகர்த்து வீரச்சாவடைந்தார்.
‘நல்லூரில் திருவிழா நடக்கிற நேரம்தான் நான் சாகணும்’ என்று அங்கயற்கண்ணி அடிக்கடி சொன்னதை நினைத்து அவளது தோழிகளான கடற்புலிகள் அழுதனர். ஏன் அப்படிச் சொல்கிறாள் – என்று புரியாமல் விளக்கம் கேட்டார்களாம் அவர்கள். அதற்கு அங்கயற்கண்ணி சொன்ன பதில், அவளது உயிர்த்தியாகத்தை விட உயர்ந்தது.
“நல்லூரில் திருவிழா நடக்கிற நேரத்தில்தான் கச்சான் வித்த காசு அம்மாகிட்ட இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான், ஒவ்வொரு வருஷமும் என் நினைவு நாளுக்கு வீட்டுக்கு விசாரிக்கப் போகும் பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவால் நல்ல சாப்பாடு கொடுக்க முடியும்” என்று அங்கயற்கண்ணி சொன்னபோதே கண்கலங்கி அவளை அணைத்தவர்கள், அவள் இறந்த பிறகு அதைச் சொல்லிச் சொல்லி அழுதார்கள். எந்த அளவுக்கு அவளுக்குள் வைராக்கியம் இருந்ததோ அந்த அளவுக்கு அவளிடம் அன்பும் பரிவும் இருந்தது என்பதை அந்த வார்த்தைகள் உணர்த்தின.
உலகின் எந்த இலக்கியத்திலும் இப்படியொரு இதயத்தைப் பிழியும் பதிவு இருக்க வாய்ப்பேயில்லை. தன் மரணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், ஆண்டுதோறும் தன் நினைவுநாளுக்கு வீட்டுக்கு விசாரிக்கச் செல்வோருக்கு நல்ல சாப்பாடு கிடைக்கவேண்டும், அதற்கு வசதியாக – தாயின் கையில் காசு புழங்குகிற ஒரு பருவத்தில் தான் இறக்கவேண்டும் – என்று நினைக்கிற மனம் எங்காவது எவருக்காவதோ, எங்கோ ஓர் இலக்கியத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரத்துக்கோ இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்?
எங்கள் இனத்தின் இன்னொரு அடையாளமாகவே இன்றுவரை திகழும் எங்கள் குலக்கொழுந்து அங்கயற்கண்ணியைத் தவிர வேறெவருக்கும் அப்படியொரு கவலை எழுந்திருக்க வாய்ப்பேயில்லை.
தமிழினம் இருக்கும் வரை அங்கயற்கண்ணி பேசப்படுவாள், வணங்கப்படுவாள், போற்றப்படுவாள்.