ஊழல் அற்ற நாட்டில் மக்களுக்கு வாழும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். ஊழலுடன் தொடர்புடைய ஒருவரை நேரில் சந்திக்கும் பட்சத்தில் திருடர் என கூறும் அளவுக்கு நாட்டு மக்களுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்.
ஊழலை ஒழிக்காமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த முடியும் என்று கூறினாலும் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மாற்றத்தை விரும்பும் தலைவர்களை அடையாளம் காணுவோம் எனும் தொனிப்பொருளில் கொழும்பு, விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு மக்கள் வழங்குவதை உண்டு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். 70 வீதமானவர்கள் ஏழையாகவே இருக்கின்றனர்.
இவர்கள் கூறுவதைப் போன்று செயல்படும் பட்சத்தில் அரசியல்வாதிகளின் பின்னால் சென்று பிள்ளைகளை அரச பாடசாலைகளுக்கு அனுப்ப நேரிடும்.
தமக்கான தொழிலை பெற்றுக் கொள்ள வேண்டி ஏற்படும். எம்மை சுற்றியுள்ள பொலிஸாருக்கும், மக்களுக்கும் இது சகல விதத்திலும் பொருந்தும்.
முதலில் மக்களை தெளிவுபடுத்த வேண்டும். ஊழலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை புறக்கணிக்க வேண்டும்.
ஊழல் அற்ற நாட்டில் மக்களுக்கு வாழும் வாய்ப்பை ஸ்தாபிக்க வேண்டும். ஊழலை ஒழிக்காமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த முடியும் என எவ்வாறு கூக்குரலிட்டாலும் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.
மேலும் பணவீக்கம் சரி எனவும் நாடு வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அரசியல்வாதிகள் தற்போது காண்பிக்க முயற்சிக்கின்றனர்.
ஊழலை ஒழிக்காமல் நாட்டில் எவருக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கு வாய்ப்பு கிடைக்காது. ஊழலுடன் தொடர்புடைய ஒருவரை நேரில் சந்திக்கும் பட்சத்தில் திருடர் என கூறும் அளவுக்கு நாட்டு மக்களுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும். அவ்வாறு ஒன்று திரளுமாறு நாம் பொதுமக்களிடத்தில் கோரிக்கை விடுக்கிறோம்.
மேலும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த போராட்டத்தில் நான் பங்கு கொள்ளவில்லை. இது எனது தனிப்பட்ட போராட்டம்.
இந்த போராட்டத்தில் எந்த ஒரு கட்சியை சார்ந்த எந்த ஒரு நபருக்கும் கலந்து கொள்ள முடியும். இருப்பினும் அவர் மீது மக்களிடத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும்.
ஊழல், திருட்டு என்பவற்றை மேற்கொள்ளாதவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலம் இதில் இருந்து விட்டு பிறகு மற்றொன்றுக்கு குதிக்கும் நபராக இருந்தால் எம்மால் அவ்வாறான தரப்பினரை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.