மலையகத் தமிழர்கள் உரிமைகளை வென்றெடுக்க கைகோர்ப்போம்! – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

113 0
எங்கள் மலையக தமிழ் மக்களின் 200 வருட வரலாற்றினை நினைவுகூரும் வகையில் இந்த வருடம் முழுவதும் பல்வேறு தரப்பினரால் பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது. 200 வருட நிகழ்வுகள் வெறுமனே நிகழ்வுகளாக முடிந்துவிடாமல் மலையக தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தினை அனைத்து தரப்பினரிடமும் வலியுறுத்துகிறோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (12) வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள ஒன்றியம் அதனூடாக மேலும் தெரிவிக்கையில்,

1980களின் பின்னர் மலையக மக்களுக்கான குடியுரிமை படிப்படியாக வழங்கப்பட்டதன் பின்னரே இச்சமூகத்தில் சில மாற்றங்கள் உருவாகின. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் எத்தனையோ பேர் வறுமை, சமூக நெருக்கடிகள், துன்பங்களின் மத்தியிலும் கல்வியில் முன்னிலை வகிக்கின்றனர். அதற்கு சான்றாக எமது பல்கலைக்கழகத்தில் மலையக தமிழ் மாணவர்கள் அனைத்துத் துறைகளிலும் மிளிர்ந்து வருகின்றார்கள். படிப்படியாக அவர்கள் தமது சுய முயற்சியிலேயே முன்னேறி வந்துள்ளார்கள்.

ஆனால், தேசிய ரீதியான வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இன்று வரை அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. கடந்த 200 வருடங்களில் அடைந்தவை சில, அடைய வேண்டியவை பல என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இருப்பினும், 200 வருட வரலாற்றை நினைவுகூரும் இந்த வருடத்தில் எம் மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சர்வதேசத்திலும் அரசியல் மற்றும் சிவில் சமூக மட்டத்திலும் பேசுபொருளாக உள்ளது. அந்த முன்னேற்றத்தை மலையக தமிழ் மக்களின் நிரந்தர தீர்வுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை பற்றிப் பேசும்போது எங்கள் மலையகத் தமிழ் மக்களின் தேசிய அடையாளம் மற்றும் சுயநிர்ணயம் பற்றியும் கூடுதல் கவனம் செலுத்தி அழுத்தம் கொடுக்கவேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது.

எங்கள் மலையகத் தமிழ் மக்கள் மீது அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் என்றும் தொடர்ந்து போராடுவோம். எங்கள் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கும் வரை நாம் தோளோடு தோள் நின்று களமாடுவோம் என குறிப்பிட்டுள்ளது.