பாரம்பரிய சிறுதானிய உணவுகளை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநராகவும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாகவும் இருக்கும் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி தெரிவித்தார்.
சென்னை தாம்பரம் – சானடோரியத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (மருத்துவமனை) சார்பில் சித்த மருத்துவம் மற்றும் நலவாழ்வுக்கான உணவு முறைகள் குறித்து 2 நாள் சர்வதேச மாநாடு ஆகஸ்ட் 10 , 11 ஆகிய தேதிகளில் கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள், ஆராச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
தேசிய இந்திய மருத்துவ முறைக் கழகத்தின் தலைவர் ஜெயந்த் தியோபூஜாரி, மாநாட்டுக்கு தலைமை ஏற்று உரையாற்றினார். தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் மைதிலி ராஜேந்திரன், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகத்தின் பதிவாளர் அஸ்வத் நாராயணன், தேசிய இந்திய மருத்துவ முறைக் கழகத்தின் சித்த மற்றும் யுனானி மருத்துவ வாரியத் தலைவர் ஜெகநாதன், ஆயுர்வேத மருத்துவ வாரியத் தலைவர் பிரசாத் ஆகியோர் மாநாட்டில் விருந்தினர்களாக பங்கேற்றனர். 2 நாள் நடந்த மாநாட்டில் 582 ஆய்வு கட்டுரைகள் இடம்பெற்றன. மாநாட்டில் சித்த மருத்துவ உணவு முறைகள் மற்றும் அவற்றின் அறிவியல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநராகவும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாகவும் இருக்கும் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி மாநாட்டில் பேசுகையில், “இந்த மாநாடு சர்வதேச சிறுதானியஆண்டை போற்றும் வகையில் அமைந்துள்ளது. பாரம்பரிய சிறுதானிய உணவுகளை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த மாநாடு பல்வேறு துறைகளுக்கிடையே அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கும்” என்றார்.