சட்ட ஆலோசனைகளை பெற்றதன் பின்னரே நிதி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டேன் ஆகவே எனது அறிவிப்பில் எவ்வித மாற்றமுமில்லை, அதற்கான அவசியமும் இல்லை, ஏனெனில் முறையான வழிமுறைகளை பின்பற்றியுள்ளேன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11) கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சபாநாயகர் கடந்த 09 ஆம் திகதி விடுத்த அறிவிப்பு தவறானது.
ஆகவே அந்த அறிவிப்பை சபாநாயகர் மீளப்பெற வேண்டும் என எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். இதற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சபாநாயகர் சபைக்கு அறிவித்ததாவது,
தனியாக நான் இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை. சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று இரண்டு மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னரே தீர்மானம் எடுக்கப்பட்டது. நீதிமன்ற வழக்கு தொடர்பில் தீர்மானத்தில் (அறிவிப்பில்) எவ்விதத்திலும் குறிப்பிடவில்லை.
நாட்டின் நிதி அதிகாரம் மேன்மை பொருந்திய பாராளுமன்றத்துக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது என்பதையே குறிப்பிட்டேன், வேறொன்றுமில்லை.
டீசல் வழக்கு விவகாரம் தொடர்பில் குறிப்பிட்டீர்கள், நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உண்டு என்பதே அந்த வழக்கில் தர்க்கமாக்கப்பட்டது. ஆகவே அதற்கமைய அவ்வாறு தீர்மானம் எடுக்க முடியாது என்றே அப்போது குறிப்பிடப்பட்டது.
ஆகவே எனது அறிவிப்பில் மாற்றமில்லை, அதற்கு அவசியமில்லை ஏனெனில் சகல பொருத்தமான வழிமுறைகளை பின்பற்றியே தீர்மானத்தை எடுத்தேன் என்றார்.
இதன்போது குறுக்கிட்டு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை எவரும் சவாலுக்குட்படுத்தவில்லை. அரசாங்கத்தின் தீர்மானத்தால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றத்தை நாட முடியும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஊழியர் சேமலாப நிதியத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமாயின் அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வர முடியும். அப்போ து எவரும் நீதிமன்றத்தை நாட முடியும் என்றார்.
நிதி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை எந்த நீதிமன்றத்திலும் சவாலுக்குட்படுத்த முடியாது. 1978 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கு அமைய உருவாக்கப்பட்ட நீதிமன்றங்களுக்கு அதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த 09 ஆம் திகதி சபைக்கு அறிவித்தார்.
சபாநாயகரின் அறிவிப்பு தவறானது. கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசாங்கத்தின் வெறும் யோசனை மாத்திரமே தவிர சட்டமூலமல்ல, அரசாங்கத்தின் தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும்.
ஆகவே சபாநாயகரின் தீர்மானம் அல்லது அறிவிப்பு தவறானது, எதிர்காலத்துக்கு தவறான எடுத்துக்காட்டாமல் அமையாமல் அந்த அறிவிப்பை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்கள்.