தமிழ் முற்போக்கு கூட்டணியின் ‘மலையகம் 200’ நடைபவனி

75 0

இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் குடியேறி, வாழ்ந்த கடந்த 200 வருட வரலாற்றை நினைவுகூரும் நிகழ்வாக தமிழ் முற்போக்கு கூட்டணியினரின் ஏற்பாட்டில்  எழுச்சி நடைபவனி இன்று (12) சனிக்கிழமை நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்றது.

இந்த எழுச்சி நடைபவனி இன்று காலை 10 மணிக்கு நுவரெலியா – கண்டி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மும்மத வழிபாட்டுடன் ஆரம்பமானது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர். இராஜாராம் ஆகியோர் தலைமையில் இந்த நடைபவனி இடம்பெற்றது.

இந்த எழுச்சி நடைபவனி நுவரெலியா – கண்டி வீதி, புதிய கடை வீதி, தர்மபால சந்தி, நானுஓயா, ரதல்ல, லிந்துலை வழியாக தலவாக்கலை நகரத்தை சென்றடைந்தது.

இந்த பேரணியில் நுவரெலியா, உடபுசல்லாவ, இராகலை, கந்தப்பளை, ஹைபொரஸ்ட், கோணபிடிய, லபுக்கலை உட்பட பல தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டு தேசிய கொடி மற்றும் பதாதைகள் ஏந்திய வண்ணம் உரிமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பியிருந்தனர்.

இதேவேளை ஹட்டன் மல்லிகைபூ சந்தியிலிருந்து ஆரம்பமான நடைபவனிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், கட்சியின் பிரதி தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் அகியோர் தலைமைதாங்கினர்.

ஹட்டன், மல்லிகைபூ சந்தியில் இன்று காலை ஆரம்பமான நடைபவனி கொட்டக்கலை பத்தனை வழியாக தலவாக்கலை நகரை சென்றடைந்தது.

இந்த நடைபவனியில் ஹட்டன், மஸ்கெலியா, நோர்வூட், பொகவந்தலாவ, கினிகத்தேன, கொட்டக்கலை, வட்டக்கொட, கொட்டக்கலை உட்பட பல பிரதேச தோட்ட மக்கள் கலந்துகொண்டனர்.