அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதாக கூறி 6 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மூலம் பாதிக்கப்பட்ட மூவர் கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதாக கூறி பெண்ணொருவர் உள்ளிட்ட மூவரிடம் நபர் ஒருவர் 6,271,000 ரூபா பண மோசடி செய்துள்ளதாக கொழும்பு நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர் அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதுடைய அருக்கொட, அலுபொமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் மூவரில் ஒருவரிடம் டொயோட்டா ஆக்சியோஸ் (Toyota Axio) ரக வாகனத்தை விடுவிப்பதாக கூறி 39 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாவும், மற்றொருவரிடம் அதேபோன்று இரண்டு வாகனங்களை விடுவிப்பதாக 10 இலட்சம் ரூபாவும் பெற்றுள்ளார்.
மேலும், குறித்த பெண்ணிடம் வேகன் ஆர் (Wagon R) வாகனத்;தை விடுவிப்பதாக கூறி 13 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவும் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த சந்தேக நபருக்கு எதிராக வெவ்வேறு பொலிஸ் நிலையங்களில் பண மோசடி தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் புதுக்கடை, இலக்கம் 6 இலக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.