சபாநாயகரின் தீர்மானம் நீதிமன்றத்தை கட்டுப்படுத்துவதாக உள்ளது

107 0

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை நீதிமன்றில் சலாலுக்குட்படுத்த முடியாது என்ற சபாநாயகரின் தீர்ப்பின் மூலம் பாராளுமன்றத்தின் தீர்ப்பே நீதிமன்றத்தின் தீர்ப்பாக அமைய வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கிறது. இது மிகவும் பயங்கரமான நிலைமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சபாநாயகரின் தீர்மானம் குறித்து பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற சர்ச்சையில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடியாது என்ற சபாநாயகரின் தீர்ப்பின் மூலம் பாராளுமன்றத்தின் தீர்ப்பே நீதிமன்றத்தின் தீர்ப்பாக அமைய வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கிறது.

அது பயங்கரமான நிலைமையாகும். ஏனெனில் அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் பிரதான தூண்களான நிறைவேற்றுத்துறை, பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகியன சுயாதீனமான தூண்களாகும்.  ஒன்றை ஒன்று அதிகாரம் செலுத்த முடியாது.

ஆனால் சபாநாயகரின்  தீர்மானத்தின் மூலம் எமது நாட்டு சபாநாயகர் ஜனாதிபதியின் முகவராக இருந்து பாராளுமன்ற தீர்மானத்தை நீதிமன்றத்துக்கு பாதிப்பாக தீர்ப்பு வழங்கி இருப்பது நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தெளிவாகிறது.

இது பிழையான முறை. நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து விருந்துபசாரம் வழங்குவதன் மூலம் ஜனாதிபதிக்கு தேவையான முறையில் அவர்கள் தீர்ப்பளிப்பார்கள் என நினைக்க வேண்டாம்.

அதனால் இந்த அரசாங்கம் இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களே இருக்கும் அது நிச்சயமாக மாற்றமடையும்.

அதனால் சபாநாயகர், சபாநாயகர் பதவியை அளெகரவப்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது. எனவே நீதிமன்றத்தை அடக்கும் வகையில் வழங்கிய தீர்ப்பை சபாநாயகர் மீள பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.