ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக அரசு அலுவலரான ஜேர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணுவ தளவாடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அலுவலகம் ஒன்றின் பணியாற்றிவந்த அந்த நபருடைய பெயர் தாமஸ் (Thomas H) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லினிலுள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் Bonn நகரிலுள்ள ரஷ்ய துணை தூதரகம் ஆகிய இடங்களுக்கு தானே சென்ற தாமஸ், முக்கிய தகவல்கள் சிலவற்றை கையளித்துள்ளார்.
மேற்கு ஜேர்மனியிலுள்ள Koblenz என்னுமிடத்தில் வைத்து தாமஸ் கைது செய்யப்பட்ட நிலையில், பொலிசார் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டார்கள்.
நேற்று நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்ட தாமஸ் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணை துவங்க உள்ளது.
இப்படி ரஷ்யாவுக்காக உளவு பார்த்த முதல் ஜேர்மானியர் தாமஸ் அல்ல. ஏற்கனவே, ஜனவரி மாதம் ஆர்தர் E என்னும் ஜேர்மானியர் ரஷ்யாவுக்கு உளவுத்துறை தகவல்களைக் கையளித்ததாக கைது செய்யப்பட்டார்.
அதற்கு முன், ஜேர்மன் உளவுத்துறையில் பணியாற்றிய ஒருவர் ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக டிசம்பரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பிருப்பதாக கருதப்பட்ட ஆர்தர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.