ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளக அரசியல் கொந்தளிப்புகள் நாளுக்கு நாள் தீவிரமடைவதற்கு பிரதான காரணமாக புதிய அரசியல் கூட்டணிக்கான முயற்சியே காணப்படுகின்றது. ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் புதிய கூட்டணிக்கான திட்டப் பணிகளை முன்னெடுக்கின்றமையினால் பொதுஜன பெரமுனவின் அரசியல் எதிர்காலம் என்பது நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது.
குறிப்பாக இந்த நிலைமையானது ராஜபக்ஷர்களின் அரசியல் எதிர்காலத்திற்கும் சவால்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக் ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். இந்தச் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
பஷில் வியூகம்
‘பொதுஜன பெரமுனவின் முழுமையான ஆதரவை ஏற்கனவே உங்களுக்கு வழங்கி உள்ளோம். எனவே ஆளும் கட்சிக்குள் இருந்துகொண்டே புதிய கூட்டணியமைக்கும் முயற்சிகளை நிறுத்த வேண்டும்’ என்று இதன் போது பஷில் ராஜபக்ஷ, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவற்றை செவிமெடுத்த ஜனாதிபதி ரணில், ‘பொதுஜன பெரமுனவின் உள்ளக அரசியல் விடயங்களில் தலையிடுவது எந்தளவில் பொருத்தமானதாக இருக்கும் என்று புரியவில்லை’ என கூறி சிறு புன்னகையுடன் கருத்து கூறுவதை நிறுத்தி கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கூட்டணி குறித்து தீர்க்கமானதொரு தீர்மானத்தை எடுக்காவிடின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் அநாவசியமான சிக்கல்கள் அதிகரித்து உள்ளக நெருக்கடிகள் தீவிரமடையும். எனவே நிமல் லான்சா போன்றவர்களை அழைத்து உடன் பேசுமாறு பஷில் ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்கால தேர்தல்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் இப்புதிய அரசியல் கூட்டணியை எவ்வாறேனும் தடுத்து விட வேண்டும் என்ற வகையில் பஷில் ராஜ பக்ஷ தற்போது செயற்படத் தொடங்கியுள்ளார். பொதுஜன பெரமுனவில் உள்ள தனது விசுவாசிகளை கொண்டு புதிய அரசியல் கூட்டணிக்கு எதிரான வியூகங்களை பஷில் வகுத்துள்ள நிலையில், இதன் எதிரொலி ஓரிரு வாரங்களில் வெளிப்படும்.
அதிருப்தியில் லான்சா குழு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பஷில் ராஜபக்ஷவின் சந்திப்பு குறித்தும், புதிய அரசியல் கூட்டணிக்கு எதிரான பஷில் ராஜபக்ஷவின் செயல்பாடுகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா குழுவினருக்கு தகவல் கசிந்துள்ளது. பஷில் ராஜபக்ஷவின் கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடம் நேரடியாகவே கடும் அதிருப்தியை தெரிவித்துள்ள நிமல் லான்சா குழுவினர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் புதிய கூட்டணியின் அரசியல் செயல்பாடுகளை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிருப்தியாளர்கள் மற்றும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் தரப்பினர்களாலேயே இந்தப் புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியுடன் இணைந்து செயல்படுவதற்கு குமார வெல்கம தலைமையிலான தரப்பினருடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிமல் லான்சா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 குறித்த ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு
2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் தேசியத் தேர்தல் ஒன்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்று மீண்டும் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கியுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை வலுப்படுத்தவும் செயல்படுத்தவும் தேவையான அனைத்து யோசனைகளையும் உள்ளடக்கிய பிரேரணையை இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமன்றி 13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரப்பகிர்வு குறித்து விசேட அறிவிப்பை எதிர்வரும் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் வெளியிட ஜனாதிபதி தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது பொலிஸ் அதிகாரம் தவிர்த்து ஏனைய அதிகாரங்களை அனைத்து மாகாணங்களுக்கிடையில் எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பது குறித்து முக்கிய அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட உள்ளார்.
எவ்வாறாயினும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மை கட்சிகளிடையே ஏகோபித்த இணக்கப்பாடு ஒன்று இல்லை என்றும் பிரதான எதிர்க்கட்சி உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளும் பல்வேறு வகையில் தடைகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதி ரணில், 13 குறித்து முக்கிய பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்க திட்டமிட்டுள்ளார்.
புதிய அரசியல் கூட்டணி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிரான கூட்டணி குறித்து அரசியல் களத்தில் பல்வேறு இரகசிய சந்திப்புகள் மற்றும் நகர்வுகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கொழும்பு-5, மஹாகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் முக்கிய சந்திப்பு ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ன, அநுர பிரியதர்ஷன யாபா, சுசில் பிரேமஜயந்த, நிமல் லான்சா, நளின் பெர்னாண்டோ, லசந்த அழகியவண்ண, பிரியங்கர ஜயரத்ன மற்றும் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
புதிய அரசியல் முன்னெடுப்புகள் குறித்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது எடுக்கும் அரசியல் ரீதியிலான பல தீர்மானங்கள் தோல்விகளை சந்தித்து வருவதாக இதன்போது தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன, புதிய கூட்டணிக்கான முயற்சிகளை நிறுத்துவதற்கு பஷில் கடுமையாக முயற்சித்தும், பல தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் வருவதாக கூறினார்.
இவற்றை நாம் பொருட்படுத்தக் கூடாது. எது நடந்தாலும் முன்னோக்கிச் செல்ல வேண்டியது மிகவும் அவசியமாகும். எமக்கு ஆதரவளிக்க விரும்பாத பலரும் தற்போது முன்வந்துள்ளமை உத்வேகமளிப்பதாக அநுர பிரியதர்ஷன யாப்பா இதன்போது தெரிவித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலர் புதுமையான விடயங்கள் குறித்து பேசுகின்றனர். ஆரம்ப நிலையை உணராத வகையிலேயே அவர்கள் கருத்து கூறுகின்றனர் என்று கூறிய போது, அதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வீதியில் நடந்து செல்லக் கூட முடியாத அளவில் அரசியல் ரீதியில் தோல்வியை சந்தித்த பின்னரும் கூட இவ்வாறான வீராப்பு பேச்சுக்கள் இவர்களுக்கு தேவை தானா என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகளை தணிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட செயற்பாடுகளையும் தீர்மானங்களையும் மறந்து விட இயலாது. நாட்டில் அமைதியை ஏற்படுத்தி அரசியல்வாதிகளுக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழலை உருவாக்கிய ஜனாதிபதிக்கு, நன்றி மறந்தவர்களாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் செயல்படுகின்றமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா இதன்போது கூறியுள்ளார்.
மீண்டும் ‘அப்பம்’
மாலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கலந்துரையாடல் 8 மணி வரை நீடித்த நிலையில், அமைச்சர் மஹிந்த அமரவீர வருகை தந்தவர்களுக்கு இரவு போஷனத்தை ஏற்பாடு செய்திருந்தார். அனைவரும் உணவு உண்ணுவதற்கு தயாரான நிலையில், மஹிந்த அமரவீரவின் வீட்டில் ‘அப்பம்’ இல்லாமல் இருக்காது. உண்ணுவதற்கும் அச்சமாகவே உள்ளது என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த புன்னகையுடன் அரசியல் சாடைமொழியில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு நடப்பு அரசியல் குறித்து பல தகவல்களை பரிமாறிக்கொண்டு இராப்போஷனத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் புதிய அரசியல் கூட்டணியின் பிரசார நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடத் தொடங்கினர்.
புதிய அரசியல் கூட்டணி குறித்து பெயர் குறிப்பிடா விடினும், அது குறித்த பிரசார நடவடிக்கைகள் பல தரப்பினர் மத்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொகுதி அளவிலும் மாவட்ட ரீதியாகவும் விசேட கூட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜா-எல ரன்ரீச் ஹோட்டலிலும் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக கூட்டம் இடம்பெற்றதாக நிமல் லான்சா இதன் போது கூறினார்.
கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 50க்கும் மேற்பட்ட அமைப்பாளர்கள் கலந்துகொண்டதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். அத்துடன் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் தொகுதி அமைப்பாளர்களை நியமித்து புதிய அரசியல் கூட்டணி குறித்து தெளிவுபடுத்தல்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிமல் லான்சா குறிப்பிட்டார்.
ராஜகிரிய, இல. 118 அலுவலம்
ராஜகிரிய, லேக் டிரைவ் வீதி, 118 என்ற இடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் கொள்கை பரப்பு அலுவலகம் குறித்து கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். இந்த அலுவலகத்தில் கடந்த வாரம் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் சந்திப்புக்களும் இடம்பெற்றிருந்தன. புதிய அரசியல் கூட்டணியில் இணையும் உறுப்பினர்களுக்கு அங்கத்துவ அட்டை அலுவலகத்தின் ஊடாகவே வழங்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்திருந்த முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் என பலர் புதிய அரசியல் கூட்டணிக்கு ஆதரவு வழங்க முன் வந்துள்ளனர்.
அது மாத்திரமன்றி மற்றுமொரு முக்கியமான விடயம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் செயலாளராக செயற்பட்ட சுகீஸ்வர பண்டார மற்றும் பஷில் ராஜபக்ஷவின் தீவிர செயல்பாட்டாளரான எஸ். அமரசிங்க ஆகியோரும் ராஜகிரிய, இல. 118 அலுவலகத்துடன் இணைந்துள்ளமை பொதுஜன பெரமுனவுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
இணை அமைப்புகளை புதிய அரசியல் கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் வகையில் சுகீஸ்வர பண்டார மற்றும் எஸ். அமரசிங்க ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
எம்.பி.யாகும் ஆசையில் முஜிபுர்
கொழும்பு மாநகர சபையை நம்பி பாராளுமன்றத்தை கைவிட்ட முஜிபுர் ரஹ்மானின் இன்றைய கோரிக்கை, தேசிய பட்டியலில் என்னை உள்வாங்குங்கள் என்பதாகவுள்ளது. டயானாவின் ஆசனம் காலியாகுவதில் நிறைய சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. ஆகவே இப்போதைக்கு தேசிய பட்டியலில் உறுப்பினர்களாக உள்ள இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் அல்லது மயந்த திசாநாயக்க ஆகிய இருவரில் ஒருவரை இராஜினாமா செய்யச் சொல்லி, அதை தனக்கு தரும்படி முஜிபுர் மறைமுகமாக கோரி வருகின்றாராம்.
அவரது கோரிக்கையில் நியாயம் உள்ளது. அவர் பாராளுமன்றத்தில் சிறப்பான எம்.பியாக இருந்தார் என கூட்டணி சிறுபான்மை கட்சித் தலைவர்கள் இதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர். விரைவில் சஜித்துடன் பேச வும் உள்ளனராம்.
நாமலுக்காக ரணிலை ஆதரிக்க முயலும் மஹிந்த
மொட்டு கட்சியில் உள்ள ராஜபக்ஷ அணி, நாமலின் எதிர்காலம் அவர் அடுத்த பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஆவதில்தான் உறுதிப்படுத்தப்படும் என நம்புகிறது. பஷில் வேறு மாதிரி திட்டம் போட்டாலும், மஹிந்தவின் நோக்கம் இதுதானாம். சஜித், அனுர வந்து விட்டால், நாமலின் எதிர்காலம் முடிவுக்கு வந்து விடும் என்பதால், ரணில் தொடர்ந்து ஜனாதிபதியாக இருக்க வேண்டும் எனவும் எண்ணுகிறார் மஹிந்த. இதனால், ரணில் சொல்லி, விக்கி வெளியிட்ட ‘பொல்லு பொலிஸ்’ அதிகாரத்துடன் கூடிய 13ஐ மஹிந்த ஆதரிக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
வடக்கு – கிழக்கில் மாகாண சபை தேர்தலும் நடக்கலாம். அதை தொடர்ந்து ரணில், தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்க, மொட்டுக் கட்சியின் மஹிந்த அணி, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பிரிந்து வருபவர்கள் அணி, ஏற்கனவே அரசில் இருந்து பிரிந்து எதிரணியில் இருக்கும் அணி ஆகியவற்றின் ஆதரவுடன் பெரிய கூட்டணி அமைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு போக எண்ணுகிறார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான சட்ட திருத்தத்தை பாராளுமன்றம் நிராகரிக்கவும் முடியாது. பாராளுமன்ற தேர்தலில் மஹிந்த அணி ரணிலுடன் இணையாது. இவ்வாறு ஜனாதிபதி தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி வியூகம் அமைத்து வருகின்றது.
கட்சியின் செயற்குழுக் கூட்டம் கடந்த வாரம் இடம்பெற்ற போது, செயற்குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனக் கூட்டம் மிகப் பெரும் எடுப்பில் நடத்தப்படவுள்ளது. மாவட்டங்கள் தோறும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு முன்னோக்கிச் சென்று ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி எடுத்து வருகின்றது.
ஜே.வி.பி. தலைவர்களுடன் பொது வேட்பாளர் குறித்து பேச்சு
ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பங்காளி சிறுபான்மைக் கட்சி தலைவர்கள், ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க, செயலாளர் டில்வின் சில்வா ஆகியோரை வியாழக்கிழமை இரவு சந்தித்து உரையாடி உள்ளனர்.
எதிரணிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்க முடியுமா என்பது குறித்து இங்கு பேசப்பட்டுள்ளது. அதற்கான வாய்ப்பு இல்லாவிட்டால் ரணில் மீண்டும் ஜனாதிபதியாவதை தடுக்க முடியாது என இங்கு பொதுக் கருத்து ஏற்பட்டுள்ளது.
ஆனால், 2005, 2010, 2015 ஆண்டுகளில் பெற்ற கசப்பான அனுபவங்கள் காரணமாக இனியும் பொதுக் கூட்டணி என்ற ஏற்பாட்டு க்கு செல்ல ஜே.வி.பி தலைவர்கள் தமது தயக்கத்தை வெளிக்காட்டியுள்ளனர்.
பொது எதிரணிக் கூட்டில் ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி இரண்டும் இடம் பெறாவிட் டால் இதுபற்றி பேசி பயனில்லை என சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் கறாராக கூறி விட்டார்கள். இந்த உரையாடலை தொடர்வோம் என்ற முடிவுடன் சந்திப்பு நிறைவடைந்துள்ளது.
பேசுபொருளாக மாறிய மனோவின் கருத்து
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கடந்த வாரம் வடக்குக்கு சென்றிருந்தார். அங்கு அவர் வடக்கு, கிழக்குக்கு மட்டுமாவது மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்திடம் ஒன்றிணைந்து கோருவோம் என்ற கருத்தை பல்வேறு இடங்களில் தெரிவித்திருந்தார்.
வடக்கு, கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்த ஒரே குரலில் சொல்வோம். இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் சொல்வோம். அதை பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பு போன்று பாவிப்போம். சமஷ்டி தவிர வேறு எதுவும் வேண்டாம் என்பதற்கும் 13 மூலமாக சமஷ்டியை அடைவோம் என்ற இரண்டு நிலைப்பாடுகளுக்கு இடையில் மக்கள் வாக்களிக்கட்டும் என்ற மனோவின் யோசனை வடக்கில் பேசுபொருளாக தற்போது மாறியுள்ளது.
பல்வேறு தரப்பினரையும் சந்திக்கும் பாக்லே
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தில் எட்டப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பல்வேறு தரப்பினரையும் சந்தித்து விளக்கமளித்து வருகின்றார். தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்களையும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர் கடந்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் எட்டப்பட்ட உடன்பாடுகள் தொடர்பிலும் அரசியல் தீர்வு தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் எடுத்துக்கூறியுள்ளார்.
இதேபோன்று பத்திரிகை ஆசிரியர்களையும் அவர் சந்தித்திருந்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவையும் வெள்ளிக்கிழமை சந்தித்து தனது கருத்துக்களை பரிமாறியிருந்தார்.