மலையக எழுச்சி நடைபயணத்தின் நிறைவு நாள் நிகழ்வுகள் நாளை மாத்தளையில் ஏற்பாடு!

84 0

‘மாண்புமிகு மலையக மக்கள்’ கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூலை 28ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட மலையக எழுச்சிப் பயணத்தின் நிறைவு நாள் நிகழ்வு மாத்தளையில் நாளை சனிக்கிழமை ஆகஸ்ட் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பில் அருட்திரு செங்கன் தேவதாசன் தெரிவிக்கையில்,

‘மலையகம் 200’ எழுச்சிப் பயணத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் மாத்தளை ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் ஆகஸ்ட் 12ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு பல்வேறு  நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தலைமன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் மாத்தளையை வந்தடைந்த பின்னர் பகல் 12.30 மணிக்கு இறுதிநாள் நிகழ்வுகள் நிறைவடையவுள்ளது.

மலையக மக்களின் வருகையின் 200வது வருடப் பூர்த்தியை நினைவுகூரும் நடைபவனியில் மலையகத் தமிழ் சமுதாயத்தினர் முழுமையான மற்றும் சமமான பிரஜைகளாக, அர்த்தபூர்வமாக பங்கேற்றுள்ள நிலையில் தம் சமூகம் சார்ந்து 11 அம்ச கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபயணம் இப்பிரதிபலிப்பின் ஒரு பகுதியாக அமைவதோடு, அவர்களின் முறையீட்டுக்கு ஆதரவளிப்பவர்கள் பங்கேற்கும் ஆதரவுப் பயணமாகவும் அமைந்திருந்தது.

மலையக எழுச்சிப் பயணத்தின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பொழுதுகளிலும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய, உதவிகள் நல்கி பங்களிப்புச் செய்து அனைத்து வழிகளிலும் தோளோடு தோள் நின்ற அரசியல் தரப்பினர், சமூக மட்ட அமைப்புகள், சிவில் சமூகத்தினர், வர்த்தகர்கள், பொது மக்கள் என அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மாத்தளையில் நடைபெறும் பயணத்தின் இறுதிநாள் நிகழ்வில் சந்திப்போம் என கூறிய அவர், நாளைய நடைபவனி நிறைவு நிகழ்வில் பங்கேற்குமாறு அனைத்து மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.