சபாநாயகரின் தீர்மானம் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு பலத்த அடி

71 0

கடன் மறுசீரமைப்பின் மூலம் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதை தடுப்பதற்கான நடவடிக்கையாகவே, சர்வதேச நாணய நிதியத்தின் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பாராளுமன்றம் அனுமதித்த விடயத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடியாது என சபாநாயகரின் தீர்மானம் அமைந்துள்ள என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) விசேட கூற்றோன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவர தேவையில்லை.

அவ்வாறு பாராளுமன்றத்துக்கு கொண்டுவர வேண்டும் என எந்த தேவையும் இல்லை. ஆனால் அரசாங்கம் இதனை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து, அதற்கு வாக்கெடுப்பு நடத்தி, இறுதியாக, இது தொடர்பாக யாருக்கும் நீதிமன்றம் செல்ல முடியாது என சபாநாயகரின் கட்டளை ஒன்றையும் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுதான் அரசாங்கத்தின் நோக்கம்.

அரசாங்கத்துக்கு ஏதாவது பிரேரணை ஒன்றை கொண்டுவர தேவையெனில், அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து, அனுமதியை பெற்றுக்கொண்டு, யாராவது அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல முற்படும்போது, அதனை தடுப்பதற்கு சிறுப்புரிமை பிரச்சினை ஒன்றை ஏழுப்பி, சபாநாயகரிடம் கட்டளை ஒன்றை பெற்றுக்கொள்வார்கள்.

இதுதான் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம்  தொடர்பில் இடம்பெற்றது. இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்றிருக்கின்றன.

ஆனால் ஒருதடவை கூட இது தொடர்பான ஒப்பந்தங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்ததில்லை. அதனால் அரசாங்கம் மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையை தடுப்பதற்கு செய்த பாரிய துராேகமாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியும் என்றால் அரசியலமைப்பில் அதற்குரிய உறுப்புரை என்ன? முடியுமானால் காட்டுங்கள்.

நாடுகளுக்கிடையில் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தங்கள் தொடர்பாகவே பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். அதனால் அரசாங்கம் திட்டமிட்டே இதனை செய்தது. அதனால் சபாநாயகரின் இந்த தீர்ப்பு பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு  பாரிய அடியாகும் என்றார்.