சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை, அமைச்சர் பொன்முடி பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.36 கோடி அளவுக்கு சொத்து குவித்துள்ளதாகஅவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி, மாமியார் சரஸ்வதி மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2002-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா, சொத்துக் குவிப்புவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி.,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், நேற்று தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரணை நடத்தினார். அப்போது அவர், ‘‘நான் பார்த்ததிலேயே மிக மோசமான வழக்கு இது. அதனால்தான் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன்’’ என்றார்.