புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை அகழாய்வில் காணப்பட்ட வட்டச் சுவர்கள்

99 0

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ள வட்டக் கோட்டையின் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் வட்டச் சுவர்கள் தென்பட்டுள்ளது.

பொற்பனைக்கோட்டையில் சங்க காலத்தைச் சேர்ந்த வட்டக் கோட்டை, கொத்தளம் இருந்ததற்கான கட்டுமானம் உள்ளது. இதேபோல, கோட்டையின் உள் மற்றும் வெளிப் பகுதிகளில் அகழி உள்ளது. இங்கு, தொல்லியல் துறை சார்பில் கடந்த மே மாதம் தொடங்கி அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தலா 15 அடி நீள, அகலத்தில் 13 இடங்களில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, தங்க மூக்குத்தி, பல்வேறு விதமான பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அகழாய்வுப் பணி நடைபெற்று வரும் ஒரு குழியில் சுமார் ஒரு அடி ஆழத்தில் வட்ட வடிவிலான சுவர் தென்பட்டுள்ளது. அடுத்தடுத்து 4 வட்டச் சுவர்கள் காணப்படுகின்றன. இவை எதற்காக கட்டப்பட்டிருக்கலாம் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

தொடர்ந்து, அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டால்தான் எதற்காக கட்டப்பட்ட சுவர்கள் என்பது தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலான குழிகளில் செங்கல் கட்டுமானம் தென்பட்டாலும், அவை ஒழுங்கற்று காணப்படுகின்றன. எனினும், ஒரு குழியில் மட்டும் முறையான தோற்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.