மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நேற்று கோஷங்களை எழுப்பினர். திமுக உறுப்பினர் கனிமொழியின் கருத்துக்கு பதில் அளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
மணிப்பூர் மட்டுமின்றி, ராஜஸ்தான், டெல்லி என பெண்கள் எங்கு துன்பப்பட்டாலும் அதனை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரசியல் ஆதாயம் இருக்கக் கூடாது.
கடந்த 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவையை இழுத்து அவமானப்படுத்தியவர்கள் திமுகவினர். அப்போது முதல்வராக பதவியேற்ற பிறகுதான் சட்டப் பேரவைக்குள் நுழைவேன் என்று சபதம் செய்து 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வராகி சபதத்தை நிறைவேற்றிக் காட்டியவர் ஜெயலலிதா.
நீங்கள் மகாபாரத கவுரவர்களின் சபை குறித்து பேசுகிறீர்கள், திரவுபதி பற்றி பேசுகிறீர்கள். ஜெயலலிதாவை அவ்வளவு சீக்கிரம் திமுக மறந்துவிட்டதா? நம்பமுடியவில்லை. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளதை பிரதமர் மோடி நிறைவேற்றிக் காட்டுகிறார்.