ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவான அங்கஜன் இராமநாதனுக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதாக அரச தரப்புகொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் எம்.பி.யுமான தயாசிறி ஜயசேகர பாராளுமன்ற நடவடிக்கைகள் குழுவில் தமது கட்சிக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இப்பிரச்சினை தொடர்பில் தயாசிறி ஜயசேகர எம்.பி.கூறுகையில், முன்னாள் ஜனாதிபதிக்கு புதன்கிழமை பேசுவதற்கு ஏழு நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இறுதியில் இரண்டு மூன்று நிமிடம் பேசக் கிடைத்தது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாததால் புதன்கிழமை ஐந்து முறை இந்த சபையில் ”கோரம்” கேட்க வேண்டியேற்பட்டது. பாராளுமன்ற நடவடிக்கைகள் குழுவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு அவ்வாறான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அவ்வாறான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி அரசியல் செய்ய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. எனவே எங்களுக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள் என்றார்.
இது தொடர்பில் சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் கூறுகையில் – இதுபற்றி நாளை பாராளுமன்ற நடவடிக்கை குழுவில் பேசுவோம் என்றார்.
இதன்போது, எழுந்த அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க , நான் வெளியிட்ட கருத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பேசினார்.
பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்கு வந்திருந்தார். அவர் இந்த குழுவில் உள்ளார். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஆளும் கட்சியில் அமர்ந்துள்ள அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் எதிர்க்கட்சி பிரதிநிதித்துவம் பெறவில்லை என்றால், அதுதொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் பேசி அந்தப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.