வர்த்தகரிடம் 10 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபருக்கு விளக்கமறியல்

109 0

வர்த்தகர் ஒருவரிடம் 10 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபர் ஒருவர் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பாதாளக் குழுக்களின் உறுப்பினரான ஹரக்கட்டாவின் உதவியாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கப்பம் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு ஹெவ்லொக் பகுதியில் வசிக்கும் பிரபல வர்த்தகர் ஒருவரிடம் இருந்து இந்த கப்பத்தை கோரியுள்ளதுடன் சந்தேக நபர் தன்னை பெந்தோட்ட கிஹான் என அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், கப்பம் தராவிட்டால் சம்பந்தப்பட்ட வர்த்தகரின் மகனைக் கடத்தி கொலை செய்யப்போவதாகவும் சந்தேகநபர் வர்த்தகரை அச்சுறுத்தியுள்ளார்.

சந்தேகநபர்  வர்த்தகருக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு ‘ஹலோ நான் பெந்தோட்ட கிஹான் மல்லி, ஹரக்கட்டாவின் உதவியாளர். உன்னுடைய தகவல்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளது. உனது மகனின் தகவல்களும் உள்ளன. இரண்டு நாட்கள் தருகிறோம். எங்களுக்கு 10 இலட்சம் ரூபா தேவை. அவ்வாறு தரவில்லை என்றால் இரண்டு நாட்களுக்கு பிறகு உன்னுடைய மகனின் அவலநிலையை செய்திகள் மூலம் பார்க்க வேண்டி ஏற்படும். நன்கு புரிந்து கொள். நீ எங்கு சென்றாலும் பரவாயில்லை. அவ்வாறு சென்றால் உனக்கு பெரிய பிரச்சினை ஏற்படும். உனது மகனை கடத்துவோம். பிறகு எந்தவொரு தயவும் பார்க்க மாட்டோம். இதுவெல்லாம் எமக்கு சிறிய விஷயம். 10 இலட்சங்களுக்காக உனது உயிரை இழக்காதே” என  அச்சுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து வர்த்தகர் மூன்று சந்தர்ப்பங்களில் ஒரு இலட்சம் ரூபாயை சந்தேகநபருக்கு வழங்கியுள்ளார்.

மீண்டும் சந்தேகநபர் வர்த்தகருக்கு தொலைபேசி அழைப்பு மூலம்  எங்களுக்கு விளையாட்டு காட்டுகிறாயா? உனக்கு  இப்போதே செய்து காட்டட்டுமா? உடனடியாக ஒரு இலட்சம் ரூபா வைப்பு செய்ய வேண்டும். எங்களுடன் விளையாடாதே என கூறியுள்ளார்.

இந்நிலையில் கொலை மிரட்டலை பொறுத்துக்கொள்ள முடியாத வர்த்தகர் கொலை மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைவாக சந்தேகநபர் நீண்ட தேடுதலுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.

அவர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபருக்கு பாதாள குழுக்களுடன் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.