ரஷ்யா உக்ரைனை ஊடுருவிய விடயம், பல நாடுகள் தங்கள் ராணுவத்தின் பலத்தை மறுபரிசீனை செய்யத் தூண்டியது. அந்த நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று.
ஜேர்மனி தன் ராணுவத்தை வலுப்படுத்த விரும்பினாலும், அதற்கு பல விடயங்கள் தடையாக உள்ளன. முதலில் ராணுவத்தில் சேர இளைஞர்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது.
2022ஐ ஒப்பிடும்போது, இந்த ஆண்டில், ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் ஆர்வம் 7 சதவிகிதம் குறைந்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 183,000 இலிருந்து 2031வாக்கில் 203,000 ஆக உயர்த்துவதென இலக்கு நியமிக்கப்பட்ட நிலையில், அந்த இலக்கை அடைவது கடினமென ராணுவத்துக்கான நாடாளுமன்ற ஆணையர் Eva Högl தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ராணுவத்தில் நிதிப்பிரச்சினையும் தளவாடங்கள் தட்டுப்பாடும் காணப்படுகிறது. இன்னொரு பக்கமோ, ராணுவத்தில் சேர ஆர்வம் தெரிவிப்பவர்களுக்கு பதிலளிக்க ஓராண்டு வரை தாமதம் ஆவதால், ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்தவர்களின் ஆர்வமும் குறைவதுடன், ராணுவத்தில் சேருபவர்களிலும் 30 சதவிகிதம் பேர் பாதியிலேயே வெளியேறிவிடுகிறார்களாம்.
எல்லாவற்றிற்கும் மேல், ஜேர்மனியில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இளைஞர்களில் ராணுவத்தில் சேருபவர்களைக் கண்டுபிடிக்க கஷ்டமாக உள்ளது. மொத்தத்தில், ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 183,000 இலிருந்து 2031வாக்கில் 203,000 ஆக உயர்த்தும் இலக்கையே மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு வந்துவிட்டது ஜேர்மனி.