13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி யோசனை முன்வைக்கும் போது அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுன அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
ஆகவே ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு என்னவென்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்,பொதுஜன பெரமுனவின் கட்சி ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி தற்போது எதிரணியில் செயற்படுபவர்கள் 13 ஆவது திருத்தம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இது எனக்கு தொடர்பற்றது என்றார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற அமர்வின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து விசேட உரையாற்றினார்.
ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பல பிரச்சினைகளுக்கான தீர்வினை ஜனாதிபதி முன்வைத்துள்ளமை வரவேற்கத்தக்கது.
ஏற்றுக்கொள்ள கூடிய விடயங்களுக்கு சுதந்திர கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி யோசனைகளை முன்வைத்துள்ள நிலையில் அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு மாற்றீடாக 13 ஆவது திருத்த விவகாரத்தில் ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை, மக்களாணை இல்லை என்கிறார்.
இது ஜனாதிபதியின் தனிப்பட்ட யோசனையா அல்லது அரசாங்கத்தின் யோசனையா,ஜனாதிபதியின் யோசனைக்கு அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடு என்ன, அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சிங்கள பிரதிநிதிகளின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்த 134 உறுப்பினர்களும் ஒருமித்த தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் அப்போது தான் ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் வினைத்திறனான சிறந்த நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த ஆளும் கட்சிகளின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்திலான கட்சியின் கீழ் உள்ளோம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒற்றையாட்சி நாட்டுக்குள் அதிகார பகிர்வு என்ற நிலைப்பாட்டுக்குள் இருந்துக் கொண்டு மாகாண சபை தேர்தலை நடத்தி அதிகாரங்களை வழங்கினார்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் சர்வக்கட்சி மாநாட்டின் போது எமது நிலைப்பாட்டை குறிப்பிடுகிறோம் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த விடயங்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது திருத்தம் தொடர்பில் புதன்கிழமை (09) குறிப்பிட்ட விடயங்களை நான் அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளேன்.
ராஜபக்ஷர்களுக்கு அடிபணிந்து செயற்பட வேண்டாம் என்று குறிப்பிடுகிறார்கள், ராஜபக்ஷர்களுக்கு அடிபணியாமல் செயற்படும் போது ராஜபக்ஷர்களுக்கு அடிபணிந்து செயற்படுவதாக குறிப்பிடுகிறார்கள். நான் எவ்வாறு செயற்படுகிறது என்று குறிப்பிடுங்கள்.
இந்த பிரச்சினை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும்,பொதுஜன பெரமுனவின் கட்சி சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவாக அந்த பக்கம் (எதிர்க்கட்சி) உள்ளவர்களும் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆகவே நீங்கள் அவரை சந்தித்து கூட்டம் நடத்தி பேசுங்கள்,எனக்கு வேலையில்லை என்றார்.