அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

86 0
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவில் அதிகரிப்பதற்கு தாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (08) ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட வருகை தந்த, கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி உயர் பெண்கள் பாடசாலையின் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று இலங்கைப் பாராளுமன்றம், கொழும்பு துறைமுக நகரம், ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்ததுடன்,  ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் ஜனாதிபதியுடனான சிநேகபூர்வ சந்திப்பிலும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி அலுவலகத்தின் வரலாறு மற்றும் இலங்கையின் ஆட்சியில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் இடமாக அதன் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

உயர்தரத்தில் கலைப்பிரிவு பாடங்களைக் கற்கும் மாணவர்களுக்கு விஞ்ஞானம், கணிதம் போன்ற ஏனைய பாடங்களையும் கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  அதன் மூலம் 2048 அபிவிருத்தியடைந்த இலங்கையை நோக்கிய பயணத்திற்குத் தேவையான எதிர்கால சந்ததியை உருவாக்க முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி அலுவலகத்தை திறந்து வைக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவிகள் இன்று ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்ததுடன், பல புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தது.

அதிபர் திருமதி எம். அபேகுணசேகர மற்றும் ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.