உதைபந்தாட்டப் போட்டியில் மோதல் சம்பவம் : ஐவருக்கு விளக்கமறியல்!

71 0

கொழும்பிலுள்ள இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையில் கடந்த திங்கட்கிழமை (07) நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின்போது ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் கைதான 5 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொரளை வெஸ்லி கல்லூரிக்கும் மருதானை சாஹிரா கல்லூரிக்கும் இடையில் நேற்று முன்தினம் மாலை வெள்ளவத்தை குரே மைதானத்தில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியின்போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

உதைப்பந்தாட்ட போட்டியில் கலந்துகொண்ட பார்வையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, பின்னர் மோதலாக மாறியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலில் மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் ஐவரும் வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

5 சந்தேக நபர்களும் நேற்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சந்தேக நபர்களை அன்றைய தினம் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும்  நீதவான் கோசல சேனாதீர உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.