துருக்கியில் மூன்று மாதம் அவசர நிலை பிரகடனம்

373 0

201607211036095895_Turkey-president-declared-a-state-of-emergency-for-three_SECVPFதுருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ராணுவத்தின் ஒரு பகுதியினர் ஆட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். தலைநகரில் ஆங்காங்கே ராணுவ டாங்கிகளை நிறுத்தி பீதியடையச் செய்த அவர்கள், முக்கிய பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக கூறினர். பின்னர் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த ராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது. மீண்டும் அதிபர் எர்டோகனின் கட்டுப்பாட்டில் அரசாங்கம் வந்துள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 246 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ புரட்சியில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் பல்வேறு பகுதிகளில் இன்னமும் பீதி நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில், அங்காராவில் உள்ள அதிபர் மாளிகையில் எர்டோகன் தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் பேசிய அதிபர் எர்டோகன், “ராணுவத்தில் புகுந்துள்ள அனைத்து கிருமிகளையும் அகற்றப்படும். துருக்கி ஒரு சுமூகமான சூழ்நிலையை எட்டுவதற்காகவும், மீண்டும் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடாமல் இருக்கவும், மூன்று மாதங்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது” என அறிவித்தார்.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததையடுத்து, அடுத்த 3 மாதங்களுக்கு துருக்கியில் அவசரநிலை சட்டம் அமலில் இருக்கும்.

ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பாக சுமார் 10 ஆயிரம் பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் காவலை நீட்டிக்க இந்த அவசர நிலை பிரகடனம் பயன்படுத்தப்படும்.

‘துருக்கியில் இதுவரை 600 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இது ஜனநாயகம், சட்டம் மற்றும் சுதந்திரத்திற்கு எதிரானதல்ல. சர்வாதிகாரத்தை ஒடுக்கி, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக தான். ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்தவர்கள் தியாகிகள் ஆவார்கள்” என்றும் அவர் பேசினார்.