விவசாயத்துக்கு தேவையான நீரை வழங்குமாறு போராடி வந்த விவசாயிகளின் பிரச்சினையை நாட்டுக்கு வெளிப்படுத்திய ஊடகங்களுக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நீரை விநியோகிப்பதற்கு அரசாங்கம் ஆரம்பத்திலேயே தீமானித்திருந்தால் பிரச்சினை தீவிரமடைந்திருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி நிலைமை காரணமாக விவசாயிகளின் விவசாய பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டு வருவதால், ஒரு வாரத்துக்கு நீரை அந்த பிரதேசத்தில் இருக்கும் நீர்த்தேக்கங்களில் இருந்து விநியோகிக்குமாறு கேட்டிருந்தனர். ஆனால் அரசாங்கம் அதனை நிராகரித்தது.
பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியும் எனவும் விவசாயிகளுக்கு நீரை வழங்கி 3மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க முடியாது எனவும் விவசாயம் பாதிக்கப்படுவதன் மூலம் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய முடியும் எனவும் அமைச்சரவையில் இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் தேவையான நீரை விநியோகிக்குமாறு விவசாயிகள் வீதிக்கிறங்கி போராட ஆரம்பித்தனர். இதனை ஊடகங்களும் நாட்டுக்கு வெளிப்படுத்தியதும் தற்போது விவசாயிகளுக்கு நீரை விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்திருக்கிறது. அதேநேரம் விவசாயிகளின் பிரச்சினையை வெளியில் கொண்டுவந்த ஊடகங்களுக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
ஆனால் சீனி மோசடி, வரி குறைப்பின் மூலம் தனவந்தர்களுக்கு கோடிக்கணக்கில் வரி நிவாரணம் வழங்கியமை போன்ற விடயங்களுக்கு தெரிவுக்குழு அமைக்கவில்லை. அதனால் விவசாயிகளுக்கு நீரை வழங்காமல் இருப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டவர்கள் யார்.? விவசாயிகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு எந்த உணர்வும் இல்லை. அதனால்தான் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கினால்போதும் என அமைச்சரவையில் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது விவசாயிகள் வீதிக்கிறங்கி போராட ஆரம்பித்த பின்னர் தற்போது விவசாயிகளுக்கு நீரை விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்திருக்கிறது. இதனை முறையாக முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் ஆரம்பத்திலேயே இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம். ஆனால் தற்போது அரசாங்கம் விவசாயிகளுக்கு நீரை வழங்கினாலும் விவசாயிகளின் பாரியளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு அழிவடைந்துள்ளன. அரசாங்கத்துக்குள் சரியான தொடர்பாடல் இல்லாமையே இதற்கு காரணமாகும் என்றார்.