கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தம் ) சட்டமூலத்தின் ஒருசில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரண்பட்டுள்ளதால் 84(2) உறுப்புரையின் பிரகாரம் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ள திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) இடம்பெற்ற அமர்வின் போது உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட ‘கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தம்) எனும் சட்டமூலத்தின் 2.3 மற்றும் 7 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் உறுப்புரையுடன் 12 (1) இணங்காததுடன் சட்டமூலத்தின் அவ்வாசகங்கள் தற்பொழுது காணப்படும் விதத்தில் நிறைவேற்றுவதற்கு அவை அரசியலமைப்பின் 84 (2) ஆம் உறுப்புரை க்கு இணங்க பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.
எனினும், சட்டமா அதிபர் தீர்மானித்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற குழுநிலையின் போது சமர்ப்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு சட்டமூலம் திருத்தப்படுமாயின் சட்டமூலத்தின் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்களின் இணக்கப்பாடின்மை நீங்கும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்திருப்பதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
அத்துடன், அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ‘நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல்’ எனும் சட்டமூலம் தொடர்பாக நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு மனுக்களின் பிரதிகள் 2023 யூலை மாதம் 31 ஆம் திகதியும் மேலுமொரு மனுவின் பிரதி 2023 ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதியும் தனக்குக் கிடைத்திருப்பதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.