கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இந்த வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையினை எதிர்வரும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டு அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி பிரிவில் இருந்து நிதி கிடைக்க இருப்பதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்கத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து 10 ஆம் திகதி சந்தேகத்திற்கு இடமான பிரதேசத்தினை அளவிட்டு அதற்கான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அகழ்வுப்பணிக்கான திகதி தீர்மானிக்கப்படவுள்ளது.
இதில் தொல்பொருள் திணைக்களம் முன்னிலையாகாத நிலையில் நாளை மறுதினம் எதிர்வரும் 10 ஆம் திகதி நேரில் பார்வையிட்டு மூன்று வார காலம் கேட்டு இது தொடர்பிலான பாதீட்டினை நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதிமன்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.