13 ஆவது திருத்த அமுலாக்கம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு கிடையாது – ஜி.எல்.பீரிஸ்

107 0

அரசியலமைப்பின் முக்கிய திருத்தமாக உள்ள 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு கிடையாது.

பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அம்சங்களை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகள் முரண்பட்டதாக உள்ளன என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (07)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் நாளை புதன்கிழமை (09) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

13 ஆவது திருத்தத்தின் பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அம்சங்களை முழுமையாக அமுல்படுத்துவதற்காக பாராளுமன்றத்தின் அனுமதி மற்றும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி முயற்சிக்கிறார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் முக்கியமானதொரு திருத்தமாகும். இந்த திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் நிறைவேற்றுத்துறை சட்டவாக்கத்துறைக்கு பொறுப்பாக்குவது ஏற்றுக்கொள்ள கூடியதொரு செயற்பாடல்ல.

13 ஆவது திருத்த அமுலாக்கம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு கிடையாது. நாட்டின்  அரசியலமைப்பின் பிரதான பேசுபொருளாக உள்ள 13 ஆவது திருத்த விவகாரத்தில் சட்டவாக்கத்துறை ,நீதித்துறை , நிர்வாகத்துறை என முத்துறைகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி முன்னெடுக்கும் செயற்பாடுகள் முரண்பட்டதாக உள்ளன.

கடந்த மாதம் இடம்பெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் உறுதியாக குறிப்பிட்டார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

பொதுஜன  பெரமுனவின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதியால் செயற்பட முடியாது. 13 ஆவது திருத்தம்  ,நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

புதிய தலைமைத்துவத்தின் ஊடாகவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இதற்கு மக்களால் பலமான அரசாங்கம் ஒன்று வெகுவிரைவில் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றார்.