ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் தொடர்பாக அமைச்சரவை வழங்கிய அனுமதி!

88 0

2026 ஆம் ஆண்டு வரை பங்களிப்புகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை குறைந்தபட்சம் 9 வீதமாக தொடர்ந்தும் பேணுவதற்கு ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சரவைப் பேச்சாளரான பந்துலகுணவர்த்தன இதனைத் தெரிவித்தார்.

இவ்விடயம்தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், ஊழியர் சேமலாப நிதியத்துக்கு சொந்தமான திறைசேரி பிணைமுறிகளை மீள்கட்டமைப்பதால் குறித்த நிதியத்தின் அங்கத்தவர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் மற்றும் நன்மைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில், அதன் கொடுப்பனவுகள் மற்றும் நன்மைகளை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்தால் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த ஐந்து வருட காலத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்காக செலுத்தப்பட்டுள்ள வருடாந்த வட்டிவீத நன்மைகளைக் கருத்தில் கொண்டு, 2023- 2026 வரை தொடர்ந்து வரும் நான்கு வருடங்களுக்கு பங்களிப்புத் தொகை அடிப்படையில் உரித்தான வட்டிவீதத்தை குறைந்தபட்சம் 9 வீதமாக அமைய வேண்டுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இயலுமாகும் வகையில், 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தைத் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.