தொல்பொருள் திணைக்களம் சங்கமித்தையின் பெயரில் தமிழர் தாயகத்தில் அரச மரங்களைத் தேடி அலைகிறது. ரணில் விக்கிரமசிங்க இந்தியா பார்த்திருக்க 13ஐ மைனஸாக்க முனைகிறார். இதுதான் மோடி சொன்னதா? இப்படித்தான் ரணில் விளங்கினாரா?
இங்கு ஆரம்பத்தில் குறிப்பிடுவதை வெறும் பகிடிக் கதையாக எவரும் எடுக்கக்கூடாது. இது ஓர் உண்மை நிகழ்வு.
வானொலி செய்தி வாசிப்பாளர் ஒருவர் அரச மர கூட்டுத்தாபனம் என்ற பதத்தை, அரசமர கூட்டுத்தாபனம் என்று, முதலிரு சொற்களையும் ஒன்றாக்கி வாசித்து விட்டார். இந்தச் செய்தியைக் கேட்டவர்களுக்கு அரச மரங்களுக்கென தனியான கூட்டுத்தாபனம் ஒன்றை அரசாங்கம் உருவாக்கி விட்டதென்ற எண்ணம் வந்துவிட்டது.
புத்தர் அரச மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாலும் வெள்ளரசு மரம் அரசாங்கத்தால் புனித மரமாக பேணப்படுவதாலும் ஷஅரசமர| கூட்டுத்தாபனம் என்று வாசிக்கப்பட்டது நேயர்களிடையே நம்பகத்தன்மைக்கு இடமளித்துவிட்டது. அந்தச் செய்தி வாசிப்பாளருக்கு தண்டம் விதிக்கப்பட்டது. அவர் காலமாகி இருபது வருடங்களாகி விட்டன.
இதனை இங்கு குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் இலங்கை அரசாங்கத்தின் தொல்பொருள் திணைக்களம் தமிழர் தாயக பூமியில் நில அபகரிப்பு, கட்டிடங்கள் அபகரிப்பு, வழிபாட்டுத் தலங்கள் அபகரிப்பு என்பவற்றின் தொடர்ச்சியாக அரச மரங்கள்(BO – Tree) இருக்குமிடங்களை தேட ஆரம்பித்துள்ளதுவே.
யாழ்ப்பாணத்தின் சுன்னாகம் பகுதியிலுள்ள கந்தரோடை எனும் இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் நேரடி நிர்வாகத்தில் சில பகுதிகள் பல வருடங்களாக உள்ளன. போர்க்காலத்தில் மாதகலில் காணி பிடித்து முகாம் அமைத்த கடற்படையினர் அங்கு சங்கமித்தை வந்திறங்கிய இடம் என்று கூறி அதனை சம்பில்துறை என பெயரிட்டு உல்லாசப் பயணிகளுக்கான இடமாக மாற்றியுள்ளனர்.
நயினாதீவும் இவ்வாறுதான் பௌத்த விகாரைக்கு இடமளித்து இன்று நாகதீப என்ற பெயர் மாற்ற சர்ச்சைக்கு உள்ளாகி நிற்கிறது. இப்பிரதேசத்தையும் சிறீலங்கா கடற்படையே பாதுகாத்து வருகிறது. கடந்த வருடத்தில் வன்னிப் பிராந்தியத்தின் பல இடங்களிலுள்ள சந்திகளில் திடீரென அரச மர கன்றுகளும் புத்தர் சிலைகளும் முளைத்து பரம்பரையாக அங்கு வாழ்ந்துவரும் தமிழருக்கு அச்சம் ஏற்படுத்தின.
இப்போது தொல்பொருள் திணக்களத்தின் ஊடுருவலுக்குள் அகப்பட்டிருப்பது யாழ்ப்பாணம் சுழிபுரத்திலுள்ள பறளாய் முருகன் ஆலய பகுதி. இந்த ஆலயத்துக்கருகில் சடைத்து வளர்ந்து நிற்கும் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரச மரத்தை சங்கமித்தையுடன் தொடர்புடையது என வர்த்தமானி அறிவித்தல் வந்துள்ளது.
இதற்கான முன்னெடுப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. பௌத்த பிக்குகள் சிலர் கூட்டமாக இங்கு சென்று குறிப்பிட்ட அரச மரத்தின் கீழே புத்தர் சிலையை வைத்து பிரித் ஓத முற்பட்டபோது ஆலய பக்தர்களும் ஊர் மக்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் பிக்குகள் அங்கிருந்து நகர நேர்ந்தது.
இப்போது பதினைந்து மாதங்களின் பின்னர் அரச வர்த்தமானி மூலம் குறிப்பட்ட அரச மரத்தை தொல்பொருள் சின்னமாக அறிவித்து பிரச்சனையை உருவாக்கியுள்ளது ரணிலின் ஆட்சி.
அநேகமாக இந்து – சைவ ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களை சோலை வனமாக்கும் வகையில் சடைத்து வளரக்கூடிய அரச மரம், ஆல மரம், வேம்பு மரம் என்பவை வளர்க்கப்படுவது வழக்கம். ஆலயங்களின் தீர்த்தக் கேணிகளை அண்மித்தும் இவை வளர்க்கப்படுவது எழுதாத ஒரு மரபாக தொடர்ந்து வந்துள்ளது. தலவிருட்சம் என்ற சொற்பதம் தமிழர் வாழ்வுடன் இணைந்திருப்பதற்கு இவைகளே முக்கியமான காரணிகள்.
அது மட்டுமன்றி தமிழர் தாயக பூமியில் பெரும்பாலான வீதிச் சந்திகளில் இந்த மரங்கள் பருத்து சடைத்து வளர்ந்திருந்தன. இவற்றின் அடிப்பாகத்தில் வேல், சூலம் போன்றவைகளை நாட்டி அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். வீதிகள் அகலிப்பு, மின்விநியோகத்துக்கான மின்கம்பங்கள் நாட்டல் போன்றவைகளால் இவைகள் தறிக்கப்பட்டுள்ளன.
இன்று அரச மரங்களையே தொல்பொருள் திணைக்களம் தமிழர் நிலப்பரப்பில் தேடி அலைகிறது என்றால், அதுவே தமிழரின் வாழ்விடத்துக்கான ஆபத்தாகவும் மாறிவருகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வானொலி செய்தி வாசிப்பாளர் தவறாக உச்சரித்த ஷஅரசமர| கூட்டுத்தாபனம் நிதர்சனமாகி விடுமோ என அஞ்ச வைக்கிறது.
கடந்த வாரப் பத்தியின் இறுதியில் ரணிலின் கையில் சிக்கியுள்ள 13வது திருத்தம் குரங்கின் கை பூமாலையாகி வருகிறது என்றும், அதிகார பகிர்வு எதுவும் இல்லாத 13ஐ பிய்த்துப் பிடுங்குவதால் குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாகவும் மாறுகிறதோ என்றும் குறிப்பிட்டிருந்தேன். தமிழர் பகுதியிலுள்ள அரச மரங்கள் மீது ரணில் கண் வைத்திருப்பதைப் பார்க்கும்போது, குரங்குகள் தாவித் திரிய மரங்களைத் தேடுவதைப் போன்ற நிலைக்கு ரணில் வந்து விடுவார் போலவும் தெரிகிறது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13ம் திருத்தம் உயிரற்ற உடலாக ஊசலாட ஆரம்பிக்கிறது. ஒப்பந்தம் வரையப்பட்டபோது தமிழருக்கான அதிகாரப் பகிர்வுக்காக வடக்கில் கிழக்கில் மட்டுமே மாகாண சபை நிர்வாகம் என்பது குறிப்பிடப்பட்டது. அவ்வாறு செய்தால் தமிழருக்குத் தனிநாடு கொடுப்பதாக சிங்களவர் கருதுவார்கள் என்று கூறி, ஒன்பது மாகாணங்களுக்கும் மாகாண சபைகள் என்று மாற்றியவர் அன்றைய அதிஉத்தமரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன. சிங்களப் பிரதேசங்களின் ஏழு மாகாண சபைகளும் ஒழுங்காக செயற்பட, தமிழர் தாயக மாகாண சபைகளை கருச்சிதைவுக்குள்ளாக்கியது ஆட்சி பீடம்.
மகிந்த ராஜபக்ச 13க்கான அதிகாரங்களை 13 பிளஸ் என்று கூறி ஏமாற்றினார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவானதும் 13ஐ முழுமையாக நிறைவேற்றி தமிழர் பிரச்சனையை தீர்க்கப் போவதாகக் கூறினார். இதற்கென ஒரு வருடமாக அவர் எடுத்த அத்தனை முயற்சிகளும் சொன்னதற்கு எதிர்மாறாகவே அமைந்தன. வண்டிலுக்குப் பின்னால் மாடுகளைக் கட்டி வண்டிலைத் தள்ளும் விளையாட்டுப் போன்றது இவருடையது.
பல சுற்றுப் பேச்சுகளை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடத்தியவர் பின்னர், சகல கட்சித் தலைவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தினார். இந்தியா புறப்படுவதற்கு முன்னர் பொலிஸ் அதிகாரம் தவிர மற்றெல்லாவற்றையும் உள்ளடக்கியதாக 13ஐ நடைமுறைப்படுத்தப் போவதாக தெரிவித்தார்.
கடந்த 36 வருடங்களாக காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமற்தான் மாகாண சபைகள் இயங்கின என்பது வரலாறு. திடீரென பொலிஸ் அதிகாரம் இல்லையென கூறுவது புதிரானது. ஏற்கனவே இல்லாததை தர முடியாது என்று கூறுவது ஏமாற்று என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
அதிகாரப் பகிர்வு பற்றி பின்னர் பேசலாம், இப்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று சகல அரசியல் கட்சிகளும் கேட்கின்றபோது ரணிலுக்கு மூக்கில் கோபம் கொப்பளிக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தாமே என்பதை மறந்து, தமது கைககள் கட்டப்பட்டிருப்பது போன்ற நடகமாடி சகல முடிவுகளும் நாடாளுமன்றத்துக்கே உரியவை என்று கூறி தம்மை ஜனநாயக நாயகனாக காட்ட முற்படுகிறார்.
13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்துமாறும் அண்மைய இந்திய விஜயத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி ரணிலிடம் நேரடியாகக் கூறியதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் தமிழ் தலைவர்களை அழைத்து கூறியுள்ளார்.
இதுபற்றி எதுவுமே வெளிப்படுத்தாத ரணில் நாடாளுமன்றத்தில் 13ம் திருத்தம் தொடர்பாக இந்த வாரத்தில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இப்போது ஆகப் பிந்தியதாக வந்துள்ள தகவல், 13வது திருத்தம் தொடர்பாக சகல கட்சித் தலைவர்களிடமிருந்தும் அவர்களது ஆலோசனையை இ;ந்த மாதம் 15ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி செயலகம் கேட்டுள்ளது.
இந்திய பிரதமர் 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கூறியது மறைக்கப்படுகிறது. மாகாண சபைத் தேர்தல்களை இருக்கும் அதிகாரங்களோடு நடத்துமாறு சகல அரசியல் கட்சிகளும் கேட்பதற்கு பதில் இல்லை. மாறாக, ஏதோ புதிதாக 13ம் திருத்தம் உருவாக்கப்படுவது போன்று சகல கட்சித் தலைவர்களிடமிருந்தும் ஆலோசனை கேட்கப்படுகிறது.
இந்தியாவின் கரிசனையும் அக்கறையும் ரணிலுக்குப் புரிந்ததா? மோடி சொன்னதற்கு ரணில் என்ன பதில் அளித்தார்? 13ஐ ரணில் மைனஸ் ஆக்க முனைவது இந்தியாவுக்கு தெரியவில்லையா?
பனங்காட்டான்