அரசியல் தளமாக உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது

99 0

அரசியலுக்கான தளமாக உச்ச நீதிமன்றத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரித்துள்ள தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தமிழக அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தமிழக அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடியதன் பதிவு என்று, ஆடியோ பதிவு ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த ஆடியோ போலியானது என்றும், அது போலியாக உருவாக்கப்பட்டதற்கான தொழில்நுட்ப ரீதியிலான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்றும் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, பிரனேஷ் ராஜமாணிக்கம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் போலீஸார் விசாரித்தால் உண்மை வெளியே வராது என்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவியல் நடைமுறை சட்ட விதிகளின்படி போதிய நடவடிக்கை எடுக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்துள்ளபோது, அரசியலுக்கான தளமாக உச்ச நீதிமன்றத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று மனுதாரரை எச்சரித்த தலைமை நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளார்.