முதல்-அமைச்சர் ஜெயலலிதா வரும் 23-ந்தேதி மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இதில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை போடப்படுகிறது.
வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.
முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும்பாதை அமைத்து முடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அந்த பாதையில் மெட்ரோ ரெயில் ஓடியது. அந்த போக்குவரத்தை முதல் – அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
மற்ற இடங்களில் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கும் பணி மற்றும் ரெயில் நிலையங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆலந்தூர்-விமான நிலையம் வரையிலான பணி முடிந்து விட்டது. விரைவில் அங்கு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
இதற்கிடையே திருமங்கலத்தில் இருந்து எழும்பூர் வரை சுமார் 7¼ கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கபாதை பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து ஷெனாய் நகர் வரை சுரங்க பாதைக்குள் சமீபத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
மேலும் எழும்பூரில் இருந்து சென்டிரல் வரை சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் நீட்டிக்கப்பட உள்ளது.இதற்கு சமீபத்தில் மத்திய மந்திரி சபை அனுமதியளித்தது. இந்த கூடுதல் வழித்தடம் ரூ.3770 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதற்கான நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நிறைவடைந்தது. சுரங்கபாதை அமைப்பதற்கான பணிகள் நாளை மறுநாள் தொடங்குகின்றன.இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி தண்டையார்பேட்டை போர்ட் டிரஸ்ட் மைதானத்தில் சனிக்கிழமை (23-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று பங்கேற்று, விரிவாக்க திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இதில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்.
வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான விரிவாக்க பணிகளை 2 வருடத்துக்குள் ஒப்பந்ததாரர் முடித்து கொடுக்க வேண்டும்.
இந்த வழித்தடத்தில் 8 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி சர் தியாகராயர் கல்லூரி, கொருக்குப்பேட்டை ஆகிய 2 ரெயில் நிலையங்கள் சுரங்கப்பாதை வழித்தடத்திலும், மீதம் உள்ள 6 ரெயில் நிலையங்கள் பறக்கும் பாதையிலும் அமைக்கப்படும். இதற்காக முதல் 2 கிலோ மீட்டர் தூரம் மட்டும் சுரங்கப்பாதை அமைக்கப்படும். மீதம் உள்ள 7 கி.மீ. தூரம் பறக்கும் பாதையாக அமைக்கப்படுகிறது.