இதுவரை காலமும் தாம் அரசியல் பேசவில்லை என்றும், அரசியலில் ஈடுபடவில்லை என்றும் கூறியிருந்த அவர், இப்போது தமிழ் மக்களின் இருப்பு, அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து ஆகியவை பற்றியும், எதிர்காலம் குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்.
தமிழ்த் தேசியம் பேசுபவர்களை சமூகத்தின் அபிலாஷைகளை பிரதிபலிக்காதவர்கள், அவர்களின் இருப்பை பற்றி சிந்திக்காதவர்கள் என்பது போல சித்திரிக்கிறது பேராசிரியர் பத்மநாதனின் கருத்து. அவ்வாறாயின், தமிழ்த் தேசியம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை புறக்கணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளது போல, இன்றைக்கு தமிழ் மக்களின் வாழ்வும் எதிர்காலமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.
வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கின்ற ஆக்கிரமிப்புகளுக்கு அப்பால், வெளியே தெரியாத- ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இன்னும் ஐந்து ஆண்டுகளில் வடக்கு தமிழர்களின் மாகாணம் என்ற நிலை மாறி விடும் என்று பேராசிரியர் பத்மநாதன் எச்சரிக்கும் அளவுக்கு, இங்கு கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
இனஅழிப்பு என்பது ஒரு இனத்தைக் சேர்ந்தவர்களை கொலை செய்வது மாத்திரமல்ல. அவர்களின் இருப்பை, கலாசாரத்தை, வாழ்வியலை, நிலத்தை, நிலம் மீதான உரிமையை இல்லாமல் செய்வதும், இனஅழிப்புத் தான்.
பேராசிரியர் பத்மநாதன் இதனை இப்போது தான் முதல்முறையாக வெளிப்படுத்துகிறார் என்று தெரிகிறது. இதற்கு முன்னர் இதுபற்றி அவர் எச்சரித்திருக்கிறாரா என்று தெரியவில்லை.
அவரும் சரி, அவர் போன்ற புலமையாளர்களும் சரி, இந்தக் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை பற்றி அதிகம் பேசுவதில்லை. வெளிப்படுத்துவதில்லை. அல்லது வெளிப்படுத்துவதற்கு தயங்குகின்றனர் என்பதே உண்மை.
பேராசிரியர் பத்மநாதன் வேந்தராக இருக்கின்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்றைக்கு பெரும்பான்மைச் சிங்களவர்களின் ஆதிக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களில் சிங்கள மாணவர்களின் ஆதிக்கமே அதிகரித்திருக்கிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர்களின் சொத்தாக இருந்த காலம் இப்போது மாறிக் கொண்டிருக்கிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும், மாணவர் ஒன்றியமும், தமிழ்ச் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை பிரதிபலித்த, அதனை அடைவதற்கான போராட்டங்களுக்கு முன்னோடியாக காணப்பட்ட வரலாறு இருந்தது. அந்த வரலாறு இப்போது மாறிக் கொண்டிருக்கிறது.
திட்டமிட்டு சிங்கள மாணவர்கள் அதிகளவில் புகுத்தப்படுவதும், தமிழ் மாணவர்கள் வெளியிடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களை நாடி ஓடுவதும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பாரம்பரியமும், மரபும் மாற்றப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. இந்த மாற்றம் கடந்த 14 ஆண்டுகளில் திட்டமிட்டு நிகழ்ந்தேறிய ஒன்று.
ஆனாலும் இதுபற்றி பல்கலைக்கழக மட்டங்களில் உள்ள துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள் அதிகம் பேசியதில்லை. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதில்லை. வெள்ளம் தலைக்கு மேல் போன பின்னர் தான், இதனை அவர்கள் மக்களுக்கு கூறவிழைகின்றனர்.
இனி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிங்கள ஆதிக்கத்தில் இருந்து மீட்க முடியாது. பேராசிரியர் பத்மநாதன், இதனை வெளிப்படுத்திய பின்னர், புத்தர் சிலை கொண்டு வரப்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் ‘போயா’ வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிலையுடன் ஒப்பீடு செய்து தான், வடக்கு தமிழர்களின் நிலம் என்ற நிலை 5 ஆண்டுகளில் மாறி விடும் என்று பேராசிரியர் பத்மநாதன் கூறியிருக்கிறார்.
அவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்ற சூழலும், வடக்கின் முன்னாள் முதலமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்களின் நிலமும் இருப்பும் பறிபோன பின்னர் சமஷ்டியை அடைந்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று தமிழ்த் தேசியவாதிகளை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கின்ற சூழலும் ஒன்று தான்.
தமிழர்களின் இருப்பு மற்றும் நிலம் ஆகியவற்றுக்கு ஏற்பட்டிருக்கின்ற அச்சுறுத்தலை 13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கத்தின் மூலம் தடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் தான் இத்தகைய கருத்துக்கள் ஒருங்கிணைக்கப்படுவதாக தெரிகிறது. தமிழர்களின் இருப்பையும், அபிலாஷைகளையும் உள்வாங்கியதால் தான் தமிழ்த் தேசியம் இன்றைக்கும் நிலைத்திருக்கிறது.
தமிழர்களின் அபிலாஷைகளை தமிழ்த் தேசியம் புறக்கணித்திருந்தால், தமிழ் மக்களால் அது நிராகரிக்கப்பட்டிருக்கும்.
இன்றைக்குத் தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஒருமித்த குரலாக வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் முக்கியமானது.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், தமிழரின் நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுத்துவிட முடியும் என்பதோ இருப்பை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதோ பகல் கனவு.
சிங்கள பௌத்த பேரினவாதம், 13ஆவது திருத்தச் சட்டத்தை தங்களின் விருப்புக்கேற்ப கையாளும் கருவியாகவே பார்க்கிறது. எப்போது அது அவர்களுக்கு ஒத்து வராதோ அப்போதே அதனை தூக்கியெறிந்து விடுவார்கள். இதனை சிங்கள பௌத்த பூமி என்றும், தங்களால் எங்கேயும் புத்தர் சிலையை வைக்கும் உரிமை உள்ளதென்றும், சரத் வீரசேகர போன்றவர்கள் கூச்சமேயில்லாமல் முழங்குகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு 13ஆவது திருத்தச் சட்டம் கால் தூசிக்கு சமம். 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பயன்படுத்தி, நில ஆக்கிரமிப்பை தடுக்க முயன்றால்- அவர்கள் அதற்கு மிஞ்சிய அதிகாரத்தை கையில் எடுப்பார்கள். அல்லது அந்த அதிகாரத்தை பயன்படுத்த முடியாதபடி தடுப்பார்கள்.
எனவே, வடக்கிற்கு அடுத்த 5 வருடங்களில் வரப் போகின்ற ஆபத்தை, 13ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கத்தினால் தடுத்து விடலாம் என்பது மிகையான கற்பனை.
13ஆவது திருத்தம் இலங்கை அரசாங்கத்தினால் கையாளப்பட வேண்டிய ஒன்று. அதனை செயற்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டியது இந்தியாவின் பொறுப்பு.
இலங்கையும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இந்தியாவும் அதனை நடை முறைப்படுத்துமாறு வார்த்தைகளுக்கு அப்பால் அழுத்தம் கொடுக்கவுமில்லை. அதனால் தான் இத்தகையதொரு நிலை ஏற்பட்டது. இப்போது தமிழர் தரப்பைக் கொண்டே, 13ஐ கோருகின்ற நிலை திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக தெரிகிறது.
சமஷ்டி தீர்வைக் கைவிடவில்லை என்றாலும், 13 இப்போது அவசியம் என்று கருதும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒரு பக்கத்தில் ரணில் விக்கிரமசிங்க வடக்கு-, கிழக்கு இணைப்பு இல்லை என்கிறார், பொலிஸ் அதிகாரம் குறித்து எல்லாக் கட்சிகளுடனும் பேசி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்கிறார், மாகாண சபைத் தேர்தலா? அதிகாரப் பகிர்வா? ஏதாவது ஒன்றைத் தொடுங்கள் என்று சிறுபிள்ளைத்தனமாக கேட்கிறார்.
இதற்கு மத்தியில்தான், தமிழர்கள் இப்போது சமஷ்டியைக் கோரும் தரப்பினர், 13ஐ கோரும் தரப்பினர் என்று பிளவுபடுத்தப்படுகின்றனர்.
13ஐ நடைமுறைப்படுத்துவதில் தமிழர்கள் ஒரு போதும் பங்காளிகளாக இருக்கவில்லை என்பது முக்கியமானது. அது தமிழர்களின் அபிலாஷைகளை உள்வாங்கி உருவாக்கப்பட்டதும் அல்ல. தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒன்றாகவும் இருந்ததில்லை.
தனது அரசியல் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது இலங்கை அரசின் கடமை. அதனை நடைமுறைப்படுத்தச் செய்ய வேண்டியது, 13ஆவது திருத்தத்தை முன்மொழிந்த இந்தியாவின் கடமை. இதற்குள் தமிழர் தரப்பு ஏன் 13 விடயத்தில் குத்தி முறிய வேண்டும்?
தமிழர்களின் அபிலாஷை என்பது மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு தான், 1956ஆம் ஆண்டு முதல் அதற்கு ஆதரவாக தமிழ் மக்கள் தங்களின் ஆணையை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியவாதிகள் தான் இந்த ஆணையைப் பெற்றனர். தமிழ் மக்களின் அபிலாஷைகளை அறியாமலா அவர்களுக்கு இந்த ஆணை கிடைத்தது?
என்.கண்ணன்