வனப்பகுதி தீக்கிரை இதுவரை 10 பேர் கைது

127 0

2,300 ஹெக்டேயர் வனப்பகுதி தீக்கிரை இதுவரை 10 பேர் கைது

நாட்டில் நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக சுமார் 2,300 ஹெக்டேர் நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளன.

வனப்பகுதிகளில் தீ வைக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதுடன், வனப்பகுதிகளை அண்மித்த பகுதிகளில் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நிஸாந்த எதிரிசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வனப்பகுதிகளில் தீப்பரவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

அதற்கமைவாக 95 காட்டுத்தீ பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. மாத்தளை, பதுளை, கண்டி, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களில் அதிகளவிலான தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த காட்டு தீ பரவல் மனிதச் செயற்பாடுகள் காரணமாகவே அதிகம் பதிவாகிறது. குறிப்பாக விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காகவும், மேய்ச்சல் நிலங்களை தயார் செய்வதற்காகவும் இவ்வாறு தீ வைக்கப்படுகிறது.

மேலும் வீதி கட்டமைப்பு பணிகளில் ஈடுபவர்கள் தீ வைக்கின்றனர், மிருகங்களை வேட்டையாடுவதற்கு தீ வைக்கின்றனர், சிறுவர்கள் மூலம் தீ வைக்கப்படும் சம்பவங்களும் தற்போது நாட்டில் காணப்படும் வரட்சியான காலநிலை காரணமாக மேலும் அதிகரித்துள்ளன.

இதேவேளை, காட்டு தீ பரவல் காரணமாக இதுவரையில் 2,300 ஹெக்டேயர் நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளன.

அவற்றுள் 2,000 ஹெக்டேர்கள் புல்வெளிகள் எனவும் ஏனையவை பைனஸ் போன்ற மரங்கள் நிறைந்த காடுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாடளாவிய ரீதியில் காட்டு தீ பரவல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது யஹங்கல, நுவரெலியா, பதுளை போன்ற பகுதிகளில் தீ பரவல்கள் பதிவாகியுள்ளன.

யஹங்கல வனப்பகுதியில் 500 ஹெக் டயர்களும், பதுளை மாவட்டத்தில் 170 ஹெக்டயர்களும், நுவரெலியாவில் 25 ஹெக் டயர்களும் தீக்கிரையாகியுள்ளன.

இதேவேளை ஹப்புதளை, மஹியங்கனை, சொரபொரவாவி பகுதிகளிலும் தீ பரவல் பதிவாகி வருகின்றன என்றார்.

இதேவேளை தீ பரவல் காரணமாக சுற்றுச்சூழல்  பாதிக்கப்படுவதோடு கிழக்கு மார்க்க ரயில் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹபரனைக்கும், கல்ஓயாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்டதீ பரவல் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரயில் பாதையின்  மரக்கட்டைகள் தீப்பிடித்துள்ளது. இருப்பினும் தீப்பிடித்த மரக்கட்டைகள் அகற்றப்பட்டு, புதிய மரக்கட்டைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் ஹாலிஎல, திக்வெல்ல காட்டுப்பகுதியில்  ஏற்பட்ட தீ பரவல் காரணமாக காட்டுப்பகுதியில்  அடிவாரத்தில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் நீர் பெற்றுக் கொள்ள பயன்படுத்திய நீர்க்குழாய்கள் எரிந்து சம்பலாகியுள்ளன.

இதன் காரணமாக நூற்றுக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.