சேலம் மாவட்டம் வாழப்பாடி, அக்ரஹாரம், வைத்தி படையாச்சி தெரு, ஆடு அடிக்கும் தொட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). கூலி தொழிலாளி.
இவரது குடும்பத்தினர் வீட்டில் ஒரு நாயை செல்லமாக வளர்த்து வருகிறார்கள். அதற்கு பிஸி என்ற பெயரை சூட்டி உள்ளனர். இந்த வளர்ப்பு நாய், ரவிச்சந்திரன் குடும்பத்தினர் மீது பாசமாக இருந்து வருகிறது. இவர்கள் எங்கு சென்றாலும் நாய் பிஸியும் அவர்கள் பின்னாடியே சென்று விடும்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் ரவிச்சந்திரன் குடும்பத்தினரிடம் சண்டை போட்டு விட்டு, வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றார். நீண்ட நேரமான பிறகும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால், வளர்ப்பு நாய் பிஸி மோப்பம் பிடித்தப்படி அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தது.
அவர், அந்த பகுதியில் உள்ள தனியார் கயிறு திரிக்கும் தொழிற் சாலையின் அருகே அமர்ந்திருந்தார். தற்கொலை செய்யும் எண்ணத்தில் அமர்ந்திருந்தார்.
எஜமானை கண்டு பிடித்ததும், வளர்ப்பு நாய் பிஸி மகிழ்ச்சியில், துள்ளி குதித்தப்படி பாய்ந்து சென்று அவரது கால்களை முகர்ந்து பார்த்தது. பின்னர் அவரது கால்களின் அருகே நின்று கொண்டது.
பின்னர் ரவிச்சந்திரன் நாயை வீட்டுக்கு போகுமாறு கூறி விட்டு, தூக்குப்போட்டு தற்கொலைக்கு தயாரானார். இதனால் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என நினைத்த புத்திசாலியான அந்த நாய் நேராக வீட்டுக்கு வந்து கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மகன் குமாரை (23) எழுப்பியது. ஆனால் குமார் எழும்பவில்லை.
இதனால் சத்தமாக குரைத்தது. எனினும் குமார் எழுந்திருக்கவில்லை. அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து குமார் அணிந்திருந்த சட்டையை வாயால் கவ்வி பிடித்து இழுத்தது. உடனே அவர் எழுந்தார். பின்னர் நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டே ஓடியது. அதன் பின்னாலேயே குமார் ஓடினார். கயிறு திரிக்கும் தொழிற்சாலையின் அருகே ஓடி சென்று ரவிச்சந்திரன் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தது. அப்போது அங்கு ரவிச்சந்திரன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் தந்தையை காப்பாற்றினார்.
தக்க சமயத்தில் எஜமானின் உயிரை காப்பாற்றிய பாசக்கார நாய் பிஸிசை குடும்பத்தினர் பாராட்டி விருந்து அளித்தனர்.
நாயின் அறிவு கூர்மையால் வீட்டின் எஜமான் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவத்தை கேள்விப்பட்டதும் ஊர் மக்கள் அதனை வியந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.