காவிரி ஆற்றில் வெள்ள அபாயம்

638 0

201607211036553388_flood-alert-inshore-people-of-kaveri-river_SECVPFகர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.

இந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.நேற்று மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 8340 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 53.66 அடியாகவும் இருந்தது.

நீர் வரத்து இன்று மேலும் அதிகரித்து 9048 கன அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரு அடி உயர்ந்து 54.54 அடியானது.  அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட பல மடங்கு நீர்வரத்து அதிகம் உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இதற்கிடையே கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மேலும் மழை அதிகரிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் வெள்ளத்தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் வசந்தன் மற்றம் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில் கர்நாடகாவில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வரும் பகுதிகளான செட்டிபட்டி, கோட்டையூர், கோனூர் ஊராட்சி, திப்பம்பட்டி, வீரனூர், கோவிந்தபாடி, பன்னவாடி ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கலெக்டர் அறுவுறுத்தினார்.சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைக்கு நீர் வரும் காவிரி கரையோர பகுதி மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்கும் படி தண்டோரா போட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் கர்நாடக-காவிரி எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர் வரத்தை படகில் சென்று 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் ஏற்கனவே திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரால் ஒகேனக்கலில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.அங்குள்ள காவிரி ஆற்றிலும் தண்ணீர் கரை புரண்டோடுகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கு தீயணைப்பு துறையினரும், போலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.ஒகேனக்கல் காவிரி கரையோரமுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.