சிறுவனின் பிரேதப்பரிசோதனையை தடைசெய்யப்பட்டிருந்த சட்ட வைத்திய அதிகாரியே மேற்கொண்டார்

97 0
image
கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் பிரேதபரிசோதனையை தடை செய்யப்பட்ட சட்டவைத்திய அதிகாரியொருவரே மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவ பயிற்சியாளராக பதிவு செய்ததன் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட உரிமைகள் சலுகைகளை பயன்படுத்துவதற்கு இலங்கை மருத்துவ பேரவையினால் இடைநிறுத்தப்பட்ட ருகூல் ஹக் என்ற சட்டவைத்திய அதிகாரியே சிறுவனின் பிரேதப்பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.

2022 டிசம்பர் 20ம் திகதிமுதல் இலங்கை மருத்துவ பேரவை ருகூல் ஹக்கிற்கு தடை விதித்திருந்த நிலையிலேயே அவர் பிரேதப்பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.

சிறுவனின் பிரேதப்பரிசோதனையை அவர் மேற்கொண்டுள்ளமை  தடையை மீறி அவர் சட்டவைத்திய அதிகாரியாக செயற்பட்டுவந்துள்ளார் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சரின் அனுமதியின்றி தடை செய்யப்பட்ட ஒருவர் சட்டவைத்திய அதிகாரியாக பணியாற்ற முடியாது என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் இலங்கை மருத்துவ பேரவை தனது முடிவை சுகாதார அமைச்சிற்கு தெரிவிக்க தவறியிருக்கவேண்டும் அல்லது சுகாதார அமைச்சு மருத்துவ பேரவையின் முடிவை மீறி அவர் செயற்பட அனுமதித்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ளன – இதில் இரண்டுமே  சட்டவிரோதமான விடயங்கள் என அவை குறிப்பிட்டுள்ளன.