சுகாதாரத்துறையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு அமைச்சர் கெஹலிய பொறுப்புக் கூற வேண்டிய தேவையில்லை

70 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் நிலைப்பாடு எமக்கில்லை. பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம்.

பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்.

ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு கட்சி என்ற ரீதியில் பாராளுமன்றத்தின் ஊடாகவும் ஒத்துழைப்பு வழங்குகிறோம்.

சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம்.

சுகாதாரத்துறையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு அமைச்சர் பொறுப்புக் கூற வேண்டிய தேவையில்லை. அவ்வாறான வழிமுறை ஏதும் கிடையாது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைக்க எவ்வித தீர்மானங்களும் இதுவரை எட்டப்படவில்லை. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்கும் நிலைப்பாடு எமக்கு கிடையாது. அரசியல் அனுபவமற்றவர்களே அவரை களமிறக்குவதாக குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம். முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்றார்.