வருமான வரித்துறை அலுவலர்களை தாக்கிய வழக்கு: திமுகவினர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

67 0

வருமான வரித்துறை அலுவலர்கள் தாக்கிய வழக்கில் கரூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திமுகவினர் 15 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

கரூர் செங்குந்தபுரம் குறுக்குத் தெருவில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் கடந்த மே 26-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். அப்போது அங்கு திரண்ட திமுகவினர் அதிகாரிகளை தடுத்து, தாக்கி, அவர்களது கார் கண்ணாடியை உடைத்து, ஆவணங்களை பறித்தனர்.

இவ்வழக்கில் கரூர் மாநகராட்சி உறுப்பினர்கள் பூபதி, லாரன்ஸ் உள்ளிட்ட திமுகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் 1, 2 ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

இவ்வழக்கில் கடந்த ஜூலை 28-ம் தேதி மதுரை கிளை 15 பேரின் ஜாமீனை ரத்து செய்து சம்பந்தப்பட்ட 15 பேரும் 3 நாட்களுக்குள் கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது. இதையடுத்து 15 பேரும் ஜாமீன் பெற நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.

கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ராஜலிங்கம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. திமுக மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் 2 மணி நேரத்துக்கு மேலாக வாதங்கள் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.ராஜலிங்கம் தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த 15 திமுகவினரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் நீதிபதி சி.ராஜலிங்கம் அளித்த தீர்ப்பில், திமுவினர் 15 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.