கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடுக்க நடவடிக்கை

83 0

கைத்தறி உற்பத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடுக்க அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே, கைத்தறி நெசவாளர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பட்டு கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள், காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை, திருபுவனம், கும்பகோணம், சேலம், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளனர்.பொதுவாக ஜவுளித்தொழிலில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக ஏற்றுமதியில் தொய்வு மற்றும் உள்ளுர் சந்தையில் கொள்முதல் குறைவு காரணமாக, குறிப்பாக பட்டு உற்பத்தி விற்பனை வணிகம் பெரும்பாலும் சந்தையில் குறைந்து காணப்படுகிறது. பட்டு ரக வாடிக்கையாளர்களிடையே விலைகுறைவான ரகங்களையே வாங்கும் நிலை அதிகம் உருவானதாலும் மற்றும் அதிக விலைமதிப்புள்ள சேலைகளை வாங்கும் நிலை தற்காலிகமாக குறைந்துள்ளது.

அதன் காரணமாக தனியார் பட்டு கைத்தறி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியை குறைத்தும் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் தங்கள் பட்டு ரக இருப்பினை சந்தை தேவைக்கேற்ப கணிசமாக குறைத்தும் வருகின்றனர்.எனினும், பட்டு கைத்தறி நெசவாளர்களை பாதுகாக்க கூட்டுறவு அமைப்பின் கீழ் நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பினையும் அதற்கு ஊதியமும் வழங்கப்பட்டு அவர்களது தயாரிப்புகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கைத்தறி துறை, கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின்படி அமலாக்க அலுவலகம் மூலம் பட்டு மற்றும் பருத்தி உற்பத்தி மற்றும் விற்பனை மையங்களில் தொடர்ந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் பட்டு மற்றும் பருத்தி ஒதுக்கீடு ரகங்களை சட்டத்துக்கு புறம்பாக விசைத்தறியில் உற்பத்தி செய்வதை கண்காணித்து தடுத்து வருகிறது. மேலும், கைத்தறி உற்பத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்கள் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்டு ஜவுளி நிறுவனங்களிலும், தனியார் கடைகளிலும் விற்பனையில் ஈடுபடுவதை தடுக்கவும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.