தமிழர்கள் மகாவலி என்பதை எதிர்த்து நிற்பதற்கு பாகுபாடான செயற்பாடே காரணம் – கமக்கார அமைப்பு குற்றச்சாட்டு

72 0

தமிழர்கள் மகாவலி என்பதை எதிர்த்து நிற்பதற்கு பாகுபாடான செயற்பாடே காரணம் என கமக்கார அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொக்குத்தொடுவாய் அக்கரவெளி பகுதியிலுள்ள மணல்கேணி, சுதியோடை போன்ற தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுத்தம் செய்வதற்காக பார்வையிட சென்ற போது ஒரு பகுதி துப்பரவு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரையும் அழைத்து அங்கே சென்ற போது கொழும்பிலே உள்ள முதலாளிமாரால் துப்பரவு செய்யப்பட்டதாக எங்களுக்கு கூறப்பட்டது.

11 நபர்களுக்கு 25 ஏக்கர் வீதம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வன இலாகா உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எங்களுடைய காணிகளை துப்பரவு செய்ய முடியாமல் அங்குமிங்குமாக அலைந்து திரியும் நிலையில் இவ்வாறு தொகையான காணிகள் மகாவலி என்ற பெயரில் வழங்கப்படுவதென்பது கிராம மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மகாவலியால் தமிழ் மக்களுக்கு 2 ஏக்கரும் சிங்கள மக்களுக்கு 25 ஏக்கரும் வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். தமிழ் மக்கள் மகாவலி என்பதை எதிர்த்து நிற்பதற்கு பாகுபாடான செயற்பாடே காரணம்.

இது தொடர்பாக மாவட்ட செயலாளர் அவர்கள் எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து திணைக்களங்களோடும் தொடர்பினை ஏற்படுத்தி சாதகமான முடிவினை ஏற்படுத்தி தரும்படி கிராம மக்கள் சார்பாக கோரிக்கையை முன்வைக்கின்றோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.