10ஆவது தேசிய ஜம்போரியின் உத்தியோகபூர்வ சின்னம் வெளியீடு

92 0

தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் 25ஆவது உலக சாரணர் ஜம்போரியில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கு இலங்கையின் பிரதம சாரணரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், உத்தியோகபூர்வமாக தேசியக் கொடி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ சின்னமும் இதன்போது வெளியிடப்பட்டது.

25ஆவது உலக சாரணர் ஜம்போரி 2023 ஓகஸ்ட் 1 முதல் 12 வரை தென் கொரியாவில் நடைபெறவுள்ளதோடு அதில், உலகம் முழுவதிலுமிருந்து 50 ஆயிரம் சாரணியர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்தி, 177 சாரணியர்கள், தலைவர், தலைவியர்களும் பங்குபற்றவுள்ளனர்.

இலங்கை சாரணர் குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை தென்கொரியா போன்று அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும், இந்த பயணத்தின் போது பெற்றுக்கொள்ளும் அனுபவங்களை கொண்டு நாட்டின் எதிர்காலத்திற்கு பங்களிப்புச் செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

தன்னம்பிக்கை மற்றும் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய வலுவான எதிர்கால சந்ததியைக் கட்டியெழுப்ப சாரணர் இயக்கம் வழங்கும் பங்களிப்பை பாராட்டிய ஜனாதிபதி, நாட்டின் எதிர்காலத்திற்காக பெற்றுக்கொண்ட பயிற்சியை திறம்பட பயன்படுத்துமாறு சாரணியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனபிரித் பெர்னாண்டோ, இலங்கையில் சாரணர் இயக்கத்தை விரிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய பணிப்புரையின் பிரகாரம், இலங்கையில் சாரணர் இயக்கத்தில் ஒரு இலட்சம் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் இலக்கு அண்மையில் எட்டப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.