யாழ்.பல்கலைக்கழக மோதல் குறித்து ஆராய பல்கலைக்கழக நிர்வாகக்குழுவொன்றை நியமித்து சம்பவம் தொடர்பில் நாட்டின் சட்டம் நீதி முறைமைகளுக்கு அமைய பொலிஸ் மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும். இந்தச் செயற்பாட்டின் ஊடாக குற்றவாளிகள் தண்டிக்கப்படு வார்கள் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நகர்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. இது சிங்கள தமிழ் இனவாதிகளுக்கு தீனியாக அமைந்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.வடமாகாண ஆளுநரின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,
யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் தமிழ் சிங்கள் மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியதாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் இப்போது இரண்டு தரப்பினர் மத்தியிலும் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அப்போது எந்த முரண்பாடுகளும் ஏற்படவில்லை.
மத நிகழ்வுகளுக்கு சகலரும் இடமளிக்க வேண்டும். தேசிய கீதம் தமிழில் இயற்றப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு நாம் மதிப்பளிப்பதை போலவே சிங்கள நிகழ்வுகளுக்கு தமிழ் மக்களும் மதிப்பளிக்க வேண்டும். அவ்வாறு விட்டுக் கொடுப்பும் ஒற்றுமையும் இருந்தால் தான் நல்லிணக்கம் ஏற்படும். மேலும் இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பினரிடத்திலும் தவறுகள் உள்ளன.
அதேபோல் இந்த சம்பவத்தை திரிபுபடுத்தியும் சட்ட நடவடிக்கைகளில் தாமதல் ஏற்படுவதாக கூறியும் பல்வேறு விமர்சனங்களை அரசியல் ரீதியில் முன்வைக்கின்றனர். வடக்கிலும் தெற்கிலும் பாரிய இனவாதமாக இந்த சம்பவத்தை கொண்டு செல்கின்றனர். வடக்கில் உள்ள தமிழ் இனவாதிகளுக்கும் தெற்கில் உள்ள சிங்கள இனவாதிகளுக்கும் இது தீனியாக அமைந்துவிட்டது.
வடக்கில் இப்போதும் இராணுவ ஆக்கிரமிப்பில் சிங்கள மாணவர்கள் தாக்குதலை நடத்தியதாக் கூறுகின்றனர். அதேபோல் தெற்கிலும் தமிழ் மாணவர்களின் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் சிங்கள மத விடயங்களை வடக்கில் புறக்கணிப்பதாக கூறுகின்றனர். எனினும் இந்த விடயங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தை அரசியல் மயப்படுத்தி குழப்பங்களை பெரிதுபடுத்தாது சட்ட நகர்வுகளுக்கு இடமளிக்க வேண்டும். அதேபோல் குழப்பங்களை மேலும் விமர்சித்து பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆராய இரண்டு கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது பல்கலைக்கழக நிர்வாகக் குழுவொன்றை நியமித்து சம்பவம் தொடர்பில் ஆராயவும் பல்கலைக்கழக செயற்பாடுகள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் நாட்டின் சட்டம் நீதி முறைமைகளுக்கு அமைய செயற்படும் வகையில் சிவில் உரிமைகளை பாதுகாக்க பொலிஸ் மட்டத்தில் விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மோதலில் காயமடைந்த மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை செய்துள்ளனர். ஆகவே சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் தமிழர், சிங்களவர் என்ற பாகுபாடுகள் இல்லாது மத இன ரீதியிலான விமர்சனங்களுக்கு அப்பால் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றமிழைத்த நபர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதேபோல் பல்கலைக்கழக மோதலில் வெளியாட்களின் பிரவேசம் இருந்ததாகவும், இனந்தெரியாத நபர்களை வைத்து தாக்குதலை நடத்தியதாகவும் சில முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அதற்கமைய பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனினும் இந்த காரணத்தை வைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்தக்கூடாது. மாணவர்களின் பரீட்சை நெருங்கும் நிலையில் கல்வி நடவடிக்கைகளை குழப்பக்கூடாது. படிப்படியாக ஒவ்வொரு பீடங்களின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதியும் இந்த விடயங்கள் தொடர்பில் என்னுடன் கலந்துரையாடினார். உடனடியாக நிலைமைகளை வழமைக்கு கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டார். அதேபோல் நல்லிணக்கம் என்பது வடக்குடன் முடிவடையும் ஒன்றா அல்லது தெற்கில் மட்டுமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இனவாதிகள் வடக்கில் போலவே தெற்கிலும் உள்ளனர். பௌத்தத்திலும் மாத்திரம் இல்லை இந்து, முஸ்லிம் மக்கள் மத்தியிலும் அடிப்படை வாதிகள் உள்ளனர். ஆகவே இந்த சம்பவங்கள் அவ்வாறான ஒரு சிலரினால் நடத்தப்பட்டதொன்றேயாகும். . எனினும் பெரும்பான்மை சிங்கள, தமிழ் மக்கள் நல்லிணக்கத்தையே விரும்புகின்றனர். அதை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். எனினும் நல்லிணக்கம் என்பது இலகுவில் ஏற்படும் ஒன்றல்ல. பல காலமாக துன்பப்பட்டு விடுதலையான மக்கள் மத்தியில் உடனடியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. மீள் நிர்மாணம் என்பது இலகுவானது. ஆனால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் கடினமான பயணமாகும்.
கேள்வி:- இந்த சம்பவத்துடன் இராணுவம் தொடர்புபட்டுள்ளதா? திட்டமிட்ட ஒன்றாக கூறப்படுகின்றதே?
பதில்:- இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாகவே இராணுவத்தையும் உள்நுழைக்கின்றனர். எனினும் இந்த குற்றச்சாட்டுகள் எவறறிலும் உண்மை இல்லை. ஆகவே எந்த சந்தர்ப்பத்திலும் இதில் இராணுவம் தொடர்புபட வாய்ப்பு இல்லை. அதேபோல் இந்த சம்பவம் திட்டமிட்ட ஒன்றாகவும் என்னால் கருத முடியவில்லை. உணர்வுகளுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பம் மட்டுமே இவையாகும். தமிழர் கலாசாரம் அரங்கேற்றப்பட்ட நிலையில் சிங்கள கலாசார நிகழ்வுகள் தடுக்கப்பட்டதன் மூலமாகவே இந்த சம்பவம் ஏற்பட்டது.
கேள்வி:- ஏன் சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப் படவில்லை?
பதில்:- உணர்ச்சிவசப்பட்டு சட்டத்தை கையில் எடுக்க முடியாது. விசாரணைகளை மேற்கொண்டு அதற்கு ஏற்றால் போலவே சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது உண்மையேயாகும். எனினும் விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றார்.