தேவை ஏற்பட்டால் இந்திய ராணுவம் எல்லை தாண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், தற்காத்துக்கொள்ளும் திறன் தங்கள் நாட்டுக்கு உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கார்கில் போரின் 24-வது வெற்றி தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. லடாக்கின் திராஸ் பகுதியிலுள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், “கார்கில் போர் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது. பாகிஸ்தானால் முதுகில் குத்தப்பட்டோம். நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த எங்கள் துணிச்சலான வீர மகன்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். எப்போது போர் சூழல் ஏற்பட்டாலும் படைகளுக்கு, பொதுமக்கள் வழங்கும் ஆதரவு மறைமுகமாகவே இருந்துள்ளது. தேவை ஏற்பட்டால் நேரடியாக போர்க்களத்தில் பாதுகாப்புப்படையினருக்கு ஆதரவளிக்க பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும்.
கார்கில் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்ற நிலையில் நமது ராணுவம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டிச் செல்லவில்லை. இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது. இந்தியாஅமைதியை விரும்புவதால்தான் கார்கில் போரில் வென்ற போதும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை நமது ராணுவம் தாண்டி செல்லவில்லை. நாம் சர்வதேச சட்டங்களை மதித்து அதன்படி நடந்து வருகிறோம். நாட்டின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காக்க நாம் எந்த எல்லைக்கும் செல்லலாம். எல்லை கோட்டை கடப்பது அதில் அடங்கும் என்றால் அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்தார்.