தமிழகத்தில் புதிய மாவட்டங்களுக்கு உட்பட்ட 7 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிப்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை நடத்தி வருகிறார்.
மக்களவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இதற்கான அடிப்படை ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
புதிய மாவட்டங்கள்: கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுக ஆட்சியின்போது, காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மாவட்டங்களை உள்ளடக்கி வரும் நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகளை நியமிப்பதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
வழக்கமாக, ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி நியமிக்கப்படுவார். உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு, காஞ்சிபுரத்துக்கு மாவட்ட ஆட்சியரும், ஸ்ரீபெரும்புதூருக்கு காஞ்சிபுரம் டிஆர்ஓவும் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டனர்.
தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகள் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டதால், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் குறிப்பிட்ட சில பகுதிகளும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பான்மையான பகுதிகளும் செங்கல்பட்டு மாவட்டத்துக்குள் வருகின்றன. இதனால், யாரை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிப்பது என்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. அரக்கோணம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தென்காசி என மொத்தமாக 7 தொகுதிகளில் இதே சிக்கல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் கேட்டபோது, ‘‘இந்த 7 தொகுதிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. நிலவியல், மக்கள்தொகை உள்ளிட்ட விவரங்களை முழுமையாக ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து, தேர்தல் ஆணைய அனுமதியுடன் எளிதான நிர்வாக நடைமுறை பின்பற்றப்படும்’’ என்றார்.