சுரங்கப் பணிகளுக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் இன்று என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல், என்எல்சி நிறுவனத்துக்காக வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியில் 2-வது நாளாக கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது.
எத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும், வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை பாமக அனுமதிக்காது. என்எல்சி இந்தியா நிறுவனம் தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.
எனவே, என்எல்சி நிறுவனத்துக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 28-ம்தேதி (இன்று) காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாமக சார்பில், என்எல்சி நிறு வனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்துக்கு நான் தலைமை ஏற்கிறேன்.