முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 8-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 8-வது ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், மருமகன் நிஜாம், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆவுல் மீரா மற்றும் குடும்பத்தினர் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். இதில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, வட்டாட்சியர் அப்துல் ஜபார், ராமேசுவரம் நகராட்சித் தலைவர் நாசர்கான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
கலாமின் முன்னாள் உதவியாளர் பொன்ராஜ், விவேகானந்தா குடில் சுவாமி பிரம்மானந்தா, வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், மாணவ, மாணவிகள், ராமேசுவரம் தீவு மக்கள், சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.